கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, யுவராஜ் கடுமையான குற்றச்சாட்டில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் முதல் வகுப்பு சிறை போன்ற சலுகைகள் காட்டக் கூடாது

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் தனக்கு முதல் வகுப்பு சிறை வசதிக்கோரிய மனு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்ககோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, யுவராஜ் கடுமையான குற்றச்சாட்டில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் முதல் வகுப்பு சிறை போன்ற சலுகைகள் காட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காசிராஜன்,
ஆணவக் கொலை வழக்காக இருந்தாலும் கூட சிறைத்துறை விதிகளின் படி முதல்நிலை சிறைவாசியாக கருத வேண்டி அனைத்து தகுதிகளும் யுவராஜ்க்கு உள்ளதால் அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, யுவராஜ்க்கு முதல் வகுப்பு சிறை வழங்குவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கோவை மத்திய சிறை நிர்வாகம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்

You may also like...