கோவை மாவட்டம் ஆலந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு, செம்மண் எடுக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில் எம்.சிவா

சென்னை, செப்.27-

கோவை மாவட்டம் ஆலந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு, செம்மண் எடுக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில் எம்.சிவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கவரத்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘‘கோவை பேரூர் தாலுகாவில் உள்ள ஆலந்துறை, கரடிமடை, வெள்ளிமலைபட்டினம் உள்ளிட்ட பகுதியில் செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுகிறது. ஐகோர்ட்டு உத்தரவின்படி மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், இரவு நேரங்ககளில் ஜெனரேட்டர்கள் மூலம் சூளையை இயக்கின்றனர். அதுமட்டுமல்ல பல ஆயிரம் லோடு செம்மண்களை எடுத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் வி.ஏ.ஓ. புகார் கொடுத்தும் குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை’’ என்று வாதிட்டார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்றார். இந்த வழக்கு ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்த நீதிபதிகள், ‘‘2 மூடை ஆற்று மணல்களை சைக்கிளில் எடுத்து செல்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். மணல் மூட்டையுடன் சைக்கிளையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், இங்கு பல ஆயிரம் லோடு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச் செயலை செய்த ஒருவரை கூட கைது செய்யவில்லை. இத்தனை லோடு மணலை அள்ள ஒரு டிப்பர் லாரி மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதா? அந்த மணல்கள் எல்லாம் எங்கு கொண்டு செல்லப்பட்டது? மின்சாரம் துண்டிக்கப்பட்ட செங்கல் சூளைகள் எல்லாம் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக இயங்குகிறது. புகைக்கூண்டில் இருந்து இரவெல்லாம் புகை வரும் காட்சியை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்’’ என்று கருத்து கூறினர்.

பின்னர், ‘‘இதற்கு மேலும் இந்த சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்து பூமாதேவி தாங்கமாட்டாள். எனவே, கோவை மாவட்ட சட்டப்பணிக்குழு தலைவர் நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கனிமவளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்யவேண்டும். எத்தனை லோடுகள் செம்மண் எடுக்கப்பட்டுள்ளன? சட்டவிரோதமாக செங்கல் சூளை எப்படி செயல்படுகிறது? உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அப்போது உள்ளூர் மக்கள், மனுதாரர், மனுதாரர் தரப்பு வக்கீல்களும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை நீதிபதியிடம் தெரிவிக்கலாம். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...