சிறைகளில் நெரிசல் அதிகரித்து வருவதாகக் கூறிய நீதிபதி கவுல், ஜாமீன் பெற்றவர்கள் வெளிவர உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்ட உதவி என்பதை நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள், சட்டங்கள் வழங்கும் உரிமைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் தன்னார்வ மூத்த வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியீடு மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான சட்டப் பணிகள் திட்டம், சமூக நலத் திட்டங்களுக்கான சட்ட உதவிகள் குறித்த திரட்டு வெளியீட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான திட்டத்தையும், சமூக நல திட்டங்களுக்கான சட்ட உதவிகள் குறித்த திரட்டை வெளியிட்டு பேசிய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்றம், பல திட்டங்களில் முன்னோடியாக உள்ளது போல, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் சட்ட உதவி வழங்க மூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளதும் பாராட்டத்தக்கது என்றார்.

இதை மற்ற மாநில உயர்நீதிமன்றங்களும் பின்பற்ற அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அரசுத்தரபு, எதிர்தரப்பு, நீதிபதி என மூன்று தூண்களைக் கொண்ட நீதிபரிபாலன முறையில், சுதந்திரமான அரசுத்தரப்பு முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்த நீதிபதி கவுல், திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க முடியாத எதிர்தரப்பினருக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர்கள் முன் வந்துள்ளனர் என்றார்.

ஜாமீன் பெற்றும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சிறைகளில் நெரிசல் அதிகரித்து வருவதாகக் கூறிய நீதிபதி கவுல், ஜாமீன் பெற்றவர்கள் வெளிவர உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டில் பலதரப்பட்டவர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், இதன் மூலம் தேவையற்ற வழக்குகளை தவிர்க்க முடியும் என்றார்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான திட்டம், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைய இரு பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும் எனக் கூறினார்.

சட்ட உதவி என்பதை நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, சட்ட உதவி வழங்க மூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ள இந்த திட்டத்தை மற்ற உயர் நீதிமன்றங்களும் பின்பற்றும் எனக் குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும், மக்களுக்கு அவர்களின் உரிமை பற்றி சொல்ல வேண்டியுள்ளது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் முயற்சி தான் சட்ட உதவி எனக் கூறினார்.

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் இயற்றும் முன்பே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கல்வி, அறிவு உள்ளிட்ட வளங்களை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் எனவும், பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் உள்ள வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மூத்த வழக்கறிஞர்கள், அரசின் திட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா மற்றும் தண்டபாணி ஆகியோரும் பேசினர்.

You may also like...