சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சென்னை ரேஸ்கோர்ஸுக்கு, சென்னை மாகாண அரசு கடந்த 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ்கிளப் நிர்வாகம், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை என விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கோர்ஸுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த உத்தரவிட்டதுடன், தவறினால் காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ரேஸ் கோர்ஸுக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, இன்று நிலத்தை சுவாதீனம் எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் முன் முறையீடு செய்யப்பட்டது. வாடகை பாக்கி தொடர்பான மேல் முறையீடு நிலுவையில் உள்ள போது, நிலத்தை அரசு எடுத்துக் கொண்டுள்ளதாக முறையிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

You may also like...