சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை விடுவித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகள், பிப்ரவரி மாதம் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

மூன்று மாத கால இடைவெளிக்கு பிறகு இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த நான்கு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட மேல்விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு சட்டபூர்வமானதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நான்கு வழக்குகளிலும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மற்ற வழக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் தினந்தோறும் மாலை 3 மணிக்கு மேல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டார்.

இதே போல அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி களில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

You may also like...