தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கவுன்சிலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கவுன்சிலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பழமையான 1914ம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால், சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பழமையான இந்த சட்டப்படி தான் இதுவரை தேர்தல் நடத்தப்பட்டு வந்ததாகவும், மனுவில் எந்த கோரிக்கையும் எழுப்பப்படாத நிலையில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நூறு ஆண்டுகளாக வாக்குச்சீட்டு முறைப்படி எந்த குளறுபடிகளும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டு மனுவை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட்டு விசாரணைக்கு எடுப்பது குறித்த கோரி மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மருத்துவ கவுன்சில் தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு தனி நீதிபதி முன் வழக்கு தொடர்ந்திருந்த மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...