தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அதிரடி உத்தரவு chief justice bench directed students to vacate k balu and aag Ravinthiren

 

சென்னையில் அரசால் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தில் உள்ள சான்றிதழ் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் வரும் 15 ஆம் தேதி எடுத்துக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் கோவில் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டு உள்ளதாக கூறி வன்னியர் சங்க கட்டடத்திற்கு சீல் வைத்த பல்லாவரம் வட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, கட்டிடத்தை இடிக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்னியர் சங்கம் தரப்பில், சீல் வைக்கப்பட்ட கட்டடத்தில் மாணவர்களின் சான்றிதழ், லேப்டாப் ஆகியவை சிக்கியுள்ளதால், அவற்றை எடுத்து, மாணவர்களிடம் திருப்பி கொடுக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலத்திற்கு உரிமை கோரும் அரசு மற்றும் மனுதாரர் இடையேயான பிரச்சினையில் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என கூறி மானாவர்களின் உடைமைகளை எடுக்க அனுமதித்து உத்தரவிட்டனர்.

அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) மாலை 5 மணிக்கு அந்த இடத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டும் என்றும், அரசு மற்றும் கண்டோன்மெண்ட் அதிகாரிகள் ஆஜராகி பூட்டை திறந்து சான்றிதழ்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு, ஒப்புகை கையெழுத்திட்ட பிறகு, கட்டடத்தை மீண்டும் பூட்டி சீல் வைக்கவும், இந்த நடைமுறைள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதன்பின்னர் வழக்கின் விசாரணயை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்த தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீடித்தும் உத்தரவிட்டது.

You may also like...