தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் உத்தரவு நகல்களை உடனடியாக வழங்க. cj bench.சம்பந்தப்பட்ட உறுப்பினரின் கையெழுத்தைப் பெற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வழக்குகளிலாவது உத்தரவு நகல்களை உடனடியாக வழங்கலாமே என கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய நிர்வாக தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான எல்.சந்திரகுமார் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் பணிமூப்பு, இடமாற்றம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 17 இடங்களில் மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயங்களில் 20 அமர்வுகள் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த தீர்ப்பாய அமர்வுகளில் ஒரு நீதித்துறை உறுப்பினரும், ஒரு நிர்வாக உறுப்பினரும் இடம் பெறுவர்.
சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 2 அமர்வுகள் உள்ளன. இதில் நீதித்துறை உறுப்பினர் பணியிடமும், நிர்வாக உறுப்பினர் பணியிடமும் முறையாக நிரப்பப்படுவதில்லை. இதனால் பணியில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு ஒரு அமர்வு மட்டுமே இயங்கி வந்தது. கடந்த மார்ச் 2022 முதல் நிர்வாக உறுப்பினராக ஜேக்கப் என்பவரும், நீதித்துறை உறுப்பினர்களாக லதா பசவராஜ் மற்றும் மஞ்சுளா தாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். இந்நிலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக உறுப்பினரான ஜேக்கப் பணிஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் இந்த தீர்ப்புகளில் சம்பந்தப்பட்ட உறுப்பினர் கையெழுத்திடவில்லை எனக்காரணம் கூறி சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல்கள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் பல மாதங்களாக உத்தரவு நகல்கள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே குறைந்தபட்சம் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் உத்தரவு நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், தற்போது பணியில் உள்ள ஊழியர்களை வைத்து உத்தரவு நகல்களை தயாரித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரின் கையெழுத்தைப் பெற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வழக்குகளிலாவது உத்தரவு நகல்களை உடனடியாக வழங்கலாமே என கருத்து தெரிவித்து, விசாரணையை வரும் செப்.7-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...