துப்பாக்கியால் சுடுவது போல உள்ளது. Navj sumoto order

துப்பாக்கியால் சுடுவது போல உள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த போது ரூ. 1.36 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2002-ம் ஆண்டு அவர் மீதும், அவரது மனைவி உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். இந்த வழக்கு கடந்த செப்.7 அன்று விசாரணைக்கு வந்தபோது, தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட இந்த வழக்கை நீதிபதி  என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க அதிகாரமில்லை என்பதால் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி தரப்பிலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. அதையடுத்து இதுதொடர்பாக செப்.14 அன்று தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக மறுப்பு தெரிவித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பொன்முடி மற்றும் தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார்.
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி உயர் நீதிமன்றம் தான் நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருக்கும்போது இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடமோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிடமோ விளக்கம் கோரவில்லை என ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் சேர்க்கப்படும் எனத்தெரிவித்த நீதிபதி, விசாரணையை அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ இந்த வழக்கை நான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பது ஆச்சர்யமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்வதன் நோக்கமும், நானே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதன் நோக்கமும் ஒன்று தான். இந்த வழக்கை தனிப்பட்ட ஒரு நீதிபதி விசாரணைக்கு எடுத்திருப்பதாக பார்க்கக்கூடாது. மாறாக உயர் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதாகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடம் தான் உள்ளது.  ஒருவேளை நான் எடுத்துள்ள இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அது லஞ்ச ஒழிப்புத்துறைக்குத்தான் சாதகமாக அமையும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குற்றம் சாட்டப்பட்டவரின் தோள்களில் அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுடுவது போல உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலக வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மாறாக வரும் அக்டோபர் முதல் வாரத்தில் எந்தெந்த நீதிபதிகள் எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பான மாறுதல்கள் வரவுள்ளது. அப்போது இந்த வழக்கு எந்த நீதிபதிக்கு செல்கிறதோ, அதைப் பொருத்து இந்த வழக்கின் விசாரணை குறித்தும் முடிவு செய்யப்படும், எனக்கூறி விசாரணையை வரும் அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளார்.

You may also like...