தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தருமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செப். 7- தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தருமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் நடிகர் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியான நட்சத்திர கலை விழா, ஸ்டார் கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் உதவி செய்துள்ளேன்.

கடந்த 2015 தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டு செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில், சங்த்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக ரூ.30 கோடி கடன் பெறுவது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இதையடுத்து, என் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்னை 2022 செப்டம்பர் 27 முதல் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த சஸ்பெண்ட் காலம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், நாளை தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூடுகிறது.
ஆனால், ஆயுட்கால உறுப்பினராக எனக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இதையடுத்து, எனக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்குமாறு சங்கத்திற்கு கடிதம் அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே, நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதி மறுப்பதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு 8வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.நிதிஷ் குமார், ஆர்.வி.பாபு ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...