நல்ல கல்வியை வழங்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு இருக்கிறது. நீதிபதி மகாதேவன்

அறத்தையும், உண்மையையும்
கல்வி நிறுவங்கள் போதிக்க வேண்டும்
நீதிபதி ஆர்.மகேதேவன் பேச்சு

சென்னை, ஜூன்.24

சென்னையில் நடைபெற்ற ஜே.ஜே.வி.வி. அறக்கட்டளை விழாவில் பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வி நிறுவனங்கள் அறத்தையும், உண்மையையும் போதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா (ஜே.ஜே.வி.வி.) அறக்கட்டளையின்கீழ் செயல்படும் ஸ்ரீமதி துர்காதேவி சௌத¢ரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின்(சக்திவேல் நகர், பெரவள்ளூர்) பொன்விழா ஆண்டு நிறைவு விழா, ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா (அண்ணாநகர்) பள்ளியின் பொன்விழா ஆண்டு துவக்கம், ஜெய்கோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி (எஸ்.ஆர்.பி.காலனி) பள்ளியின் வெள்ளிவிழா ஆண்டு துவக்கம் ஆகிய முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் ஆர்.மகாதேவன், ஐ.ஐ.டி.சென்னை இயக்குனர் டாக்டர் வி.காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது கூறியதாவது:

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தான் பிறந்த மண்ணுக்கும், அந்த மண் சார்ந்த கலாச்சாரத்திற்கும், அந்த கலாச்சாரத்தை ஒட்டி வாழக்கூடிய மனிதர்களுக்கு தன்னால் இயன்ற விதத்தில் சில நல்ல காரியங்களை ஆற்றவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 1972ம் ஆண்டில் தனது அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்ந்த மனிதனான ஜெய்கோபால் கரோடியா துவங்கிய இந்த கல்வி நிறுவனங்கள் பொன்விழா மற்றும் வெள்ளிவிழா ஆண்டுகளை கொண்டாடிவருகின்றன.

பிரெஞ்சு அறிஞர் ஒருவர் உலகத்தின் நாடுகள் பற்றிய ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டபோது எந்த ஒரு நாட்டை உன்னதமான நாடாக அறிவிக்கலாம் என்ற வகையில் அந்த ஆய்வு இருந்தது.

தத்துவத்தால், கலாச்சார மேன்மையால், கலைகளால், நுண்உணர்வுகளால் எந்த ஒரு நாடு என்ற கேள்விகளை எழுப்பி தரவுகளை திரட்டிய அந்த அறிஞனுக்கு விடையாக கிடைத்தது இந்தியா என்ற ஒப்பற்ற நாடு.

ஒவ்வொரு நாட்டின் அடையாளமும் ஒரு குறிப்பிட்ட விதத்திலே அமைகிறது என்று சொன்னால் இந்தியாவின் அடையாளம் எந்த வரம்புகளுக்கும் உட்படாமல் எழுந்து நிற்கிறது என்று பதிவு செய்தான் அந்த பிரெஞ்சு அறிஞன்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணுக்கான ஒரு கலாச்சாரம், இந்த மண்ணை சார்ந்த மக்களின் வாழ்க்கை அனைத்துமே வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வது என்பது மட்டுமல்லாமல் அறச்சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பது தான்.

குழந்தைகளுக்கான வாழ்க்கை, அவர்களுக்கான கல்வி, அந்த கல்வி எந்த திசையை நோக்கி செல்கிறது என்ற அனைத்தும் முக்கியமானது. சுவாமி விவேகானந்தர் குழந்தைகளுக்கு அற்புதமான ஆயுதத்தை கொடுங்கள் என்று கூறினார். அந்த ஆயுதம் எது என்றால் உன்னதமான கல்வி.

நல்ல கல்வியை வழங்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டிய சிந்தனை ஒரு மாநிலத்திற்கு இருக்கிறது. நல்ல கல்வியை வழங்கவேண்டிய கடமை ஒரு நாட்டிற்கு இருக்கிறது.

கல்வி வழங்கும் நிறுவனங்கள் தனியார் நிறுவனமாக இருந்தாலும் அதன் பின்புலமாக இயங்கக்கூடியது அறத்தையும், உண்மையையும் போதிக்கும் கல்வி நிறுவனங்களாக அவை அமையவேண்டும்.

1972ல் இருந்து இன்றுவரை அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்ந்த கல்வியை தரவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு, மாணவர்களுடைய கல்வியை வியாபாரத்தன்மை என்ற ஒரு அடைப்புக்குள் கொண்டு செல்லாமல் உன்னதமான கல்வியை வழங்கிவரும் இந்த பொன்விழா ஆண்டு கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேறிய மாணவர்களும், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும், ஜெய்கோபல் கரோடியாவை மனதளவில் பாராட்டி நினைவைப் போற்றவேண்டும்.
இவ்வாறு நீதியரசர் மகாதேவன் பேசினார்.

சென்னை ஐ.ஐ.டி,.யின் இயக்குனர் காமகோடி பேசும்போது, குழந்தைகளிடம் பெற்றோர்கள் தங்களது எண்ணத்தை திணிக்காமல் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை படிக்க அனுமதியுங்கள். இன்றைக்கு எல்லா துறைகளிலுமே நல்ல மேம்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்து படிக்கட்டும் என்றார்.

விழாவின் துவக்கத்தில் சிறப்பு விருந்தினர்களோடு ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அஷோக் கேடியா, அறங்காவலர்கள் இரா.மெய்யப்பன், ஹிதேஷ் கனோடியா, ஆலோசகர் ஆர்.சேதுராமன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றினர்.

50 ஆண்டுகளைக் கடந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி தந்துள்ள ஸ்ரீமதி துர்காதேவி சௌத்ரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் தாணுகிருஷ்ணன், இந்த பள்ளி கடந்த 50 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை காணொலி காட்சி மூலம் விளக்கி, அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முன்னாள் முதல்வர்கள், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் துவக்கத்தில் ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அஷோக் கேடியா வரவேற்றார். முடிவில் அறங்காவலர் ஹிதேஷ் கனோடியா நன்றி கூறினார்

………………

You may also like...