நிலத்தை அளக்க ரூ.5000 லஞ்சம் பெற்றதாக சர்வேயருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ெசன்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

சென்னை, ஜன. 2: நிலத்தை அளக்க ரூ.5000 லஞ்சம் பெற்றதாக சர்வேயருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ெசன்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பிர்கா சர்வேயராக பணியாற்றி வந்தவர் வி.நல்லமுத்து (65). இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்தை அளப்பதற்காக ரூ.5000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2009ல் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் நல்லமுத்துவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து 2017 மார்ச் 15ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நல்லமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்து ஆஜராகி, தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் வாய்ப்பளிக்கவில்லை. புகார் கொடுத்தவர் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட மனுதாரரிடமும் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் பெறவில்லை.
மனுதாரர் சம்மந்தப்பட்ட நிலத்தை சர்வே செய்வதற்கு காலதாமதம் செய்தார் என்பதற்காக பழிவாங்கும் நோக்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது லஞ்சம் கேட்டார், எவ்வளவுகேட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் புகார்தாரர் தரவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதைக்கூட விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. சட்ட ரீதியான சாட்சியங்களை சரியாக ஆய்வு செய்யாமல் மனுதாரருக்கு தண்டனை விதித்துள்ளதை ஏற்க முடியாது. எனவே, கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

You may also like...