நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு,” மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில், பொது மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில், உழவாரப் பணிகள்

தமிழகத்தில், ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோவில்களில், துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு,” மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில், பொது மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில், உழவாரப் பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க வேண்டும்; மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., அல்லது பி.டி.ஓ., தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி, அந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி” அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை, வழக்கு விசாரணைக்கு வந்தபோது,’ நீதிமன்ற உத்தரவுபடி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், பழமையான சைவ கோவில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக தனித்தனியாக உயர் மட்ட அலுவலர்களை கொண்ட நிலையான ஆலோசனை குழு, முதல் கட்டமாக அமைக்கப்பட்டு உள்ளது’ என, அறநிலையதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை இணை கமிஷனரை அணுகி, விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்களை, ஏழு நாட்களுக்குள் பரிசீலித்து, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
பக்தர்கள் கோவில் வளாகம், குளங்களை சுத்தம் செய்து, அங்கு வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றி, கோவில் வாயில்கள், கதவுகளுக்கு வர்ணம் பூசலாம்.
ஆனால், கோவில்களை புதுப்பிக்கவோ அல்லது புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கோவிலின் மீது உழவாரப் பணிகளில் ஈடுபடும் பக்தர்கள் எந்த உரிமையும் கோர முடியாது.
அறநிலையத்துறை, கோவிலை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; கட்டமைப்பை அவ்வப்போது ஆய்வு செய்து, உடனே நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தேவையான பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், பழமையான சைவ கோவில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாவட்ட வாரியாக உயர்மட்ட அலுவலர்களை கொண்ட நிலையான ஆலோசனை குழு, கோவில்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...