நீதிபதி அனிதா சுமந்த் / லியோ படம் / order அமுல்படுத்தியாச்சா?

லியோ படத்தின் அதிகாலை
4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சி தொடங்குவதற்கு அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் உளிட்டோர் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டுமெனவும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சியை தொடங்க அனுமதிக்க அரசு உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கீரின்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி வாதிட்டார். வக்கீல. வேலு கார்த்திகேயன் ஆஜரானார்

அப்போது, படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் உள்ளது மேலும் இடைவெளி எல்லாம் சேர்க்கும் போது அரசு அனுமதி அளித்திருக்க கூடிய நேரத்தில் ஐந்து காட்சிகளை திரையிட முடியாது என தெரிவித்தார்.

எனவே நான்கு மணி ரசிகர்கள் காட்சிக்கும் காலை ஒன்பது மணிக்கு பதிலாக ஏழு மணி காட்சிக்கும் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க அரசுக்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும், இடைவெளி நேரத்தை குறைத்து கொண்டு ஐந்து காட்சிகள் திரையிடலாம் எனவும் பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அதிகாலை நான்கு மணி மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், அதிகாலை நான்கு மணி மற்றும் காலை ஏழு மணி காட்சிகளுக்கு எந்த படத்திற்கும் அனுமதியளிக்கவில்லை என கூறினார்.

கடந்த முறை ஒரு படத்திற்கு அதிகாலை நான்கு மணி காட்சிக்கு சென்ற  ரசிகர் உயிரிழந்ததாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ள நிலையில் அதனை அரசு தான் கையாள வேண்டும் எனவும் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

இடைவெளி நேரத்தை குறைத்துக்கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் தன்னிச்சையாக கூற முடியாது என குறிப்பிட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அதனை தியேட்டர் நிர்வாகம் தான் கூற முடியும் என குறிப்பிட்டார்.

காலை ஒன்பது மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி அதனை மீற முடியாது எனவும்
லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட்ட போது ரோஹினி தியேட்டர் சேதப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் சிறப்பு காட்சிகளுக்கு விலக்கு அளிக்க முடியும் என குறிப்பிட்ட குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சாதாரண நாட்களில் அவ்வாறு அனுமதி அளிக்க முடியாது என கூறினார்.

அனைத்து படங்களுக்கும் தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதியளிப்பதாக கூறிய அசன் முகமது ஜின்னா லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தெரிந்திருந்தால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும், இடைவெளி நேரத்தை குறைத்து கொண்டு ஐந்து காட்சிகள் திரையிட வாய்ப்புள்ளதா என திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறீர்கள் ஆனால் அதனை செயல்படுத்த அனுமதிக்க வேண்டாமா என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் என தெரிந்திருந்தால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க  மாட்டோம் என அரசு தரப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட நீதிபதி அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்ததாக தெரிவித்திருந்தாலும் இயந்திர தனமாகவே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

காலை ஏழு மணி காட்சிக்கு கூட அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு எதற்கு அனுமதியளிக்கிறீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால் தானே தற்போது அவர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்பதாகவும் கூறினார்.

இடைவெளி நேரத்தை குறைத்துக்கொண்டு ஐந்து காட்சிகள் திரையிடுவதாக இருந்தால் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், 850 திரைகளில் படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் அவர்களின் பணியையும் நினைத்து பார்க்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், லியோ படத்தின் அதிகாலை
4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட முடியாது எனவும் காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சி தொடங்குவதற்கு அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அந்த கோரிக்கை மனுவை திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து அதன் மீது இன்று மாலை நான்கு மணிக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...