நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் order to sp

தூங்கிக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக பெண் அளித்த புகாரில் உரிய விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரிக்க மயிலாடுதுறை எஸ்.பி.-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரை சேர்ந்த பெண், கடந்த ஜூன் மாதம் இரவு நேரத்தில் வீட்டின் கதவுகளை திறந்துவைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த ஸ்டாலின் என்பவர், காலை பிடித்து இழுத்ததாகவும், வெளியில் சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது,
மனுதாரர் தரப்பில், பொய்யான வழக்கிலும், பாலியல் தொல்லை என்கிற தன்மை கொண்ட புகாரிலும் சிக்கவைக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், நள்ளிரவில் வீட்டின் கதவுகளை திறந்துவைத்து தூங்கியதாக கூறுவது பொறுத்தமற்றது என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து ஸ்டாலினுக்கு நிபந்தனைப்முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, மனுதாரருக்கும், புகார் அளித்த பெண்ணின் குடும்பத்திற்கும் உள்ள சிவில் பிரச்னை உள்ளதாகவும், அப்பெண்ணின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல், நேரடியாக வழக்கை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளரின் இந்த செயல்பாடு குறித்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையில் காவல்துறையினர் மீது ஏதேனும் தவறு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கைகளை 6 வாரத்திற்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...