நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆஜராகி, 3ம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு எதுவும் இல்லை.

சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் தர வேண்டும்
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நர்சிங் மாணவர் சேர்க்கையில் திருநங்கைகளுக்கு
சென்னை, அக். 13: திருநங்கைகளுக்கு நர்சிங் படிப்பில் சேர்க்கை சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும் என்று நர்சிங் படிப்பில் சேர்க்கை கோரிய திருநங்கை வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்செல்வி என்ற திருநங்கை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது இயற்பெயர் சந்தோஷ்குமார். கடந்த 2010-2011 கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். 2016-2017ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். இந்த நிலையில் எனது உடல்ரீதியாக பாலின மாற்றம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்தேன். எனது பெயரை தமிழ்செல்வி என்று மாற்றம் செய்து அதை தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2018-2019ம் கல்வி ஆண்டில் பெண்களுக்கான நர்சிங் டிப்ளமோ படிப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டது. அந்த படிப்பிற்கு நான் விண்ணப்பித்தேன். திருநங்கை என்று விண்ணப்பித்தில் குறிப்பிட்டிருந்தேன். எனக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஒதுக்கீடு இருந்தாலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு இல்லாததால் அந்த ஒதுக்கீட்டில் நர்சிங் டிப்ளமோ படிக்க எனக்கு இடம் தரவில்லை.
ஆனால், என்னை பெண்கள் பட்டியலில் சேர்த்து இடம் தரப்பட்டது. கடந்த 2021ல் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டேன். தற்போது, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கான சேர்க்கையில் எனக்கு 3ம் பாலினத்தவர் ஒதுக்கீட்டில் இடம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன் ஆஜராகி, 3ம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு எதுவும் இல்லை. மனுதாரரை பெண் பிரிவில் சேர்த்து அவருக்கு டிப்ளமோ படிப்பில் சேர இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலரே இந்த பிரிவில் வருகிறார்கள். அவர்களுக்க என இடம் ஒதுக்கப்பட்டால் அந்த இடங்களில் சேர ஒருவரும் வரவில்லை என்றால் அந்த இடங்கள் வீணாகிவிடும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், \” மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தங்களை அடையாளம் காட்டுவதற்கான உரிமை உள்ளது. ஆண், பெண் போல் 3ம் பாலினத்தவரும் தங்களின் பாலினத்தை தெரியப்படுத்த உரிமை தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை சட்டம் 2019ல் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த பிரிவினருக்கான தனி இட ஒதுக்கீடு இல்லை.

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் பெண், ஆண் என்ற பிரிவின்கீழ் மட்டுமே சேர்க்கை நடத்தி சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. ஆனால், மனுதாரர் ஆணிலிருந்து பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்துள்ளார். அதை மருத்துவ கல்வி இயக்ககம் கருத்தில் கொள்ளவில்லை. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது.

மனுதாரருக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அவருக்கு இடம் வழங்கப்பட்டு படிப்பையும் முடித்துள்ளார். ஆனால், அவர் இதுவரை பெண்ணாகவே கருதப்பட்டுள்ளார். சிறப்பு இட ஒதுக்கீட்டில் வரவில்லை.

எனவே, மனுதாரரை 3ம் பாலினத்தவர் ஒதுக்கீட்டில் சேர்த்து சேர்க்கை வழங்க வேண்டும். மனுதாரரை போல் ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தால் தகுதி அடிப்படையில் சேர்க்கை வழங்க வேண்டும்.

இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது\” என்று உத்தரவிட்டார்.

You may also like...