நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரை பணியிடை நீக்கம் செய்த இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

மதுரை மாவட்டம் மாடக்குளம் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் காப்பாளராக பணிபுரியும் சங்கர சபாபதி. சென்னை ஐகோர்ட்டில்,வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,
இடைநிலை ஆசிரியராக கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். பின்னர், 2009-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்கள், வார்டன்கள் வளர்ச்சி சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளேன்.
தமிழ்நாட்டில் பழங்குடியினரின் கல்வியறிவு 54.34 சதவீதம் ஆகும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பல மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விடுகின்றனர். பழங்குடியினர் நலப்பள்ளியில் ஆசிரியர்கள் தொகுதிப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள், இடை நிறுத்தம் இல்லாது தொடர்ந்து பணியாற்றினர். ஆனால், திடீரென அவர்களை கடந்த ஜூன் மாதம் முதல் பணி செய்ய விடாமல் தடுத்து விட்டனர். இதையடுத்து, எங்கள் சங்கத்தின் சார்பில் அரசு கோரிக்கை மனு கொடுத்தோம். கடந்த ஜூன் 30-ந்தேதி இந்த கோரிக்கை வலியுறுத்தி கள்ளக்குறி்ச்சி மாவட்டம் வெள்ளிமலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். இதில் சங்க நிர்வாகி என்ற முறையில் நானும் கலந்துக் கொண்டேன். இதையடுத்து, ஜூலை 8-ந்தேதி எனக்கு 17-பி பிரிவின் கீழ் குறிப்பாணை வழங்கப்பட்டது. எங்கள் கோரிக்கை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிம் மனு கொடுத்தோம். அந்த மனுவை பரிசீலிக்காமல், என்னை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். என்னை பணியிடை நீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிக்கு எதிரானது ஆகும். எனவே, என்னை பணியிடை நீக்கம் செய்த இயக்குனரின் உத்தரவை ரத்து செய்யவேண்டுமென மனுவில், கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரை பணியிடை நீக்கம் செய்த இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும் மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...