நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்கு பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுத்திருந்தும் இட ஒதுக்கீட்டில் தமக்கு இடம் கிடைக்கவில்லை எனவும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கலந்தாய்வின் முடிவில் காலியாக இருந்த இரண்டு இடங்கள் பட்டியலினத்தவர்களை கொண்டு நிரப்பட்டதாகவும், தற்போது அவர்கள் ஜிப்மர் கல்லூரிக்கு சென்று விட்டதால், தற்போது பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கலந்தாய்வுக்கு பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டே நிரப்பியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர் மற்றும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவு மாணவருக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிற்ப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தை உருவாக்கிய அரசு, அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் கடினமான நிலைக்கு அவர்களை தள்ளாது என நீதிமன்றம் நம்பிக்கை வைத்துள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு இடங்களை ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தோர், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோரின் இடஒதுக்கீடுகளும் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...