நீதிபதி டிக்கராமன் advised ரகசிய கேமரா வைத்து படம் பிடிக்கும் செயல்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கண்டிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வருமானம் பாதிக்கப்படும்.

சென்னை. செப்.10-

ரகசிய கேமரா
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜே.ஜே.ரெசிடென்சி ஓட்டலில் தன் தோழியுடன் வாலிபர் ஒருவர் கடந்த ஜூலை 8-ந்தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அந்த அறையில் உள்ள மின்சார ‘பிளக் பாயிண்டில்’ ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஆனந்த் (வயது 25), ரூம் பாய் ஆபிரகாம்(22) ஆகியோரை அழைத்து கேட்ட போது சரியான பதில் இல்லை. இதையடுத்து அவர் அறையை காலி செய்து விட்டு, ஓர்லியன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், முன்ஜாமீன் கேட்டு ஆனந்த், ஆபிபரகாம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஒப்புக் கொண்டனர்
அப்போது. புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜராக கூடுதல் குற்றவியல் வக்கீல் எம்.வி.ராமச்சந்திரமூர்த்தி, ‘‘தோழியுடன் அறையில் தங்கிய புகார்தாரர் மின்சார பிளக் பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை மனுதாரர்கள் இருவரையும் அழைக்கு காண்பித்துள்ளார். மனுதாரர்கள் இருவரும் உடனே அந்த கேமராவை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். அதை புகார்தாரர் தடுத்து, அந்த கேமராவை எடுத்து விட்டார். உடனே இருவரும் அந்த கேமராவில் இருந்து ஓயரை அப்புறப்படுத்தியுள்ளனர். பின்னர், கீழ்தளத்துக்கு ஓடிச் சென்று கம்ப்யூட்டரில் பதிவான வீடியோவையும், புகைப்படங்களையும் அழித்துள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைதாகியுள்ளனர். அவர்கள், அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டு, வாக்குமூலம் அளித்துள்ளனர். அனைவரது செல்போன்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
பதிவு அழிப்பு
மனுதாரர்கள் தரப்பு வக்கீல், மனுதாரர்கள் எந்த ஒரு வீடியோவை வெளியிட முயற்சிக்கவில்லை. எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67(ஏ), 66(இ) கீழ் மனுதாரர்களுக்கு மீது வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புகார்தாரர் தன் தோழியுடன் இருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் சமூக வலைதளங்களில் மனுதாரர்கள் வெளியிட்டனரா, இல்லையா? என்பது புலன் விசாரணைக்கு உட்பட்டது. இந்த வழக்கில் 3 மற்றும 4-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள், அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போது கேமரா உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
புகார்தாரர் ரகசிய கேமரா இருப்பதை கண்டு பிடித்து அதுகுறித்து கேட்கும்போது, கேமராவில் இணைக்கப்பட்ட வயரை அப்புறப்படுத்தவும், அதன் பின் கீழ்தளத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவான வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவும் செய்துள்ளனர்.
சுற்றுலா பாதிக்கும்
மேலும் புதுச்சேரி என்பது தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஊராகும். அப்படிப்பட்ட ஊரில் இதுபோல ரகசிய கேமரா வைத்து படம் பிடிக்கும் செயல்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கண்டிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வருமானம் பாதிக்கப்படும். மனுதாரர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
……………..

You may also like...