NGT நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சரமாரி அடுக்கடுக்கான கிடுக்கி பிடி கேள்வி . வெள்ள நீரில் எண்ணெய்

வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் இல்லை என்றும் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் மீது பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது…..

எண்ணெய் அகற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அரசு, எண்ணெய் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது……

சென்னை மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரில் எண்ணெய் கசிந்தது குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் விசாரித்தனர். எண்ணெய் கசிவு பாதித்த இடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் D.சண்முகநாதன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சாய் சத்யஜித், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம், காட்டுக்குப்பம் மீனவர்கள் தரப்பில் வழக்கறிஞர் யேகேஸ்வரன், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் தரப்பில் வழக்கறிஞர் M.T.அருணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், எண்ணெய் கசிவு குறித்து டிசம்பர் 7 ஆய்வு செய்தபோது, CPCL நிறுவனத்தின் தெற்கு வாயிலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வந்த தண்ணீர் சிபிசிஎல் வளாகத்திற்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பில்ட்டரை மீறி ஒரு மீட்டர் வரை தண்ணீரின் அளவு உயர்ந்ததால், எண்ணெய் வெளியேறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. டிசம்பர் 8ஆம் தேதியே எண்ணெய் வெளியேறுவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் CPCL கூறியதாகவும், அந்த நிறுவனம் உள்ள மற்ற நிறுவனங்களிலிருந்தும், எண்ணெய் வெளியேறக் கூடாது என அனைத்து ஆயில் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டதாகவும் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பக்கிங்ஹாம் கால்வாய் முதல் 11 கிலோமீட்டர் வரை எண்ணெய் பரவியுள்ளதாகவும், சிபிசிஎல் அருகில் உள்ள தோஷிபா ஆயில் நிறுவனம் கழிவுகளை முறையாக கையாளவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், CPCL ஆலை அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததும், மழைநீர் தேக்கி வைக்கும் குளத்தை முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்குக் காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் மழை வெள்ளத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளதாகவும், எண்ணெய் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மாலையில் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் CPCLல் எண்ணெய் வெளியேறியதற்கான ஆதாரம் உள்ளதாக சொல்கிறது, மீனவர்கள் தற்போது வரை மீன்பிடி செல்ல முடியவில்லை, மீனவர்ளுக்கான இடைக்கால நிவாரண தொகையை CPCL வழங்க வேண்டும், எண்ணெய் வெள்ள நீரில் கலந்தது இயற்கை பேரிடர் இல்லை, மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் தரப்பில் இரு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கசிந்தபோது, அதை அகற்றிய கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் உதவ தயாராக உள்ளதாகவும், எண்ணெய் அகற்றுவதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காட்டுக்குப்பம் மீனவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்வதை தவிர மாசு கட்டுப்பாட்டு வாரியம் எதுவும் செய்யவில்லை என்றும், மக்களுக்கு தேவையானவற்றை கூட கண்டறியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், டிசம்பர் 7ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் தெற்கு வாசலில் மட்டுமே எண்ணெய் காணப்பட்ட நிலையில், அன்று ஆய்வு செய்யும்போது குழாய்கள், எண்ணெய் கலன்களில் கசிவு இருக்கா என பார்க்கவில்லையா என்றும், 8ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலைமை என கேள்வி எழுப்பினர்.

அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு என்ன நடவடிக்கை எனவும், மழை நிவாரண அறிவிப்பு தான் வெளியாகியுள்ளதே தவிர, எண்ணெய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் என கேள்வி எழுப்பினர்.

48 மணி நேரமாக எண்ணெய் கசிவை தடுக்க பூம்ஸ்-களை வைக்க முடியல்லையா?? ஏற்கனவே 11 கிமீ பரவியுள்ள நிலையில், அதனால் 11.5 கிமீக்கு பிறகு பூம்களை வைக்கலாமே?? என அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், இரு துறைமுகங்கள், கடலோர காவல் படை ஆகியவை உதவ தயாராக உள்ளதால், அவற்றின் ஆலோசனைகளை அரசு பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.

எவ்வளவு எண்ணெய் வெள்ளத்தில் கலந்தது, எவ்வளவு எண்ணெய் அகற்றப்பட்டது என்ற விவரத்தை சமர்ப்பிக்கவில்லை, எண்ணெய் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஏன் டிரோன் மூலம் எண்ணெய் கசிவை மதிப்பிடக்கூடாது என்றும் எண்ணெய் நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பினர். மேலும் எவ்வளவு பேர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டனர், எத்தனை கடைகளில் வீடுகளில் எண்ணெய் படிந்தது, அரசு சார்பில் என்ன நிவாரணம் செய்தீர்கள், என்ன பாதிப்புகள் குடியிருப்பிலும், மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் கூறியபோது, அவர் பதிலளிக்கும் வகையில் அவருக்கு உதவவோ, அறிவுறுத்தல் வழங்க ஒரு அதிகாரி கூட உடனிருக்க வேண்டாமா?? ஒவ்வொரு கேள்விக்கும் வெளியில் சென்று, அரசிடம் பதிலை கேட்டு வருவீர்களா? உயர் அதிகாரி ஏன் யாரும் வரவில்லை?? என அதிருப்தி தெரிவித்தனர்.

எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தங்கள் நிறுவன அதிகாரிகள் தினமும் தலைமை செயலாளருடன் பேசி தகவல் தெரிவிக்கின்றனர், தங்களை மீனவர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர், அரைவேக்காடான ஒரு அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. டிரோன்களை பயன்படுத்தி ஆய்வு நடத்த அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 10 ஆயிரம் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் ( Oil Obsorbing Pads) பயன்படுத்தப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களிடம் ஆதாரம் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்வதை மட்டும் ஏற்க முடியாது என்றும், என்ன ஆதாரம் உள்ளது என்பதை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் தீர்ப்பாய உறுப்பினர்கள் எண்ணூர் காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் ஆலோசனைகளை தலைமை செயலாளர் பெற்றுக்கொள்ளலாம், எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இதுவரை திருப்திகரமாக இல்லை என தெரிவித்தனர்.

பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை செயலர் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழல் துறை செயலர் தலைமையில் ஒரு குழு ஏற்கனவே இயங்கி வருவதாகவும், மாநில அளவில், மாவட்ட அளவில், உள்ளூர் அளவில் என ஏற்கனவே குழுக்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடலோர காவல் படை ஆய்வில், கடலில் எண்ணெய் கலக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், கழிமுகத்திலிருந்து கடலுக்குள் எண்ணெய் செல்லாமல் தடுக்க 1KM தூரத்திற்கு எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்க வேண்டியுள்ள நிலையில், தற்போதுவரை 75 மீட்டருக்கு மிதவைகள் அமைத்துள்ளதாகவும், பிற இடங்களில் இருந்து மிதவைகள் வரவைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் கடலில் கலக்காமல் தடுக்கவும், இருக்கும் எண்ணெய் எடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டருக்கும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350மீட்டருக்கும் தடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு போதுமான நிவாரணத்தையும், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினர்.

வழக்கை டிசம்பர் 14க்கு தள்ளிவைத்த தீர்ப்பாயம், எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசு, மாசு கட்டுப்பாடு வாரியம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டுள்ளது.

சிறுவர்களை வைத்து, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்துவதாக மீனவர் அமைப்பு தரப்பில் குற்றச்சாட்டப்பட்டபோது, சிறார்களை எண்ணெய் அள்ளும்பணிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

You may also like...