படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 05ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படுகொலைக்கு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, செம்பியத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது.

மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று (ஜூலை 07) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. போதுமான இடவசதி உள்ளது. ஆனாலும், மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது என தெரிவித்தார்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

16 அடி சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. அதனால், மணிமண்டபம் அமைக்க அதனால் அனுமதி மறுக்கப்பட்டது.

அரசு சார்பில் 3 இடங்கள் உடலை அடக்கம் பரிந்துரை செய்தது. மூலக்கொத்தலம் பகுதியில் 2000 சதுர அடி இடம் உள்ளது. அங்கே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
உரிய இட வசதி இல்லாமல் அனுமதி வழங்க முடியாது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி விதிகளின் படி அனுமதி இல்லை. மணிமண்டபம் அமைக்க குறைந்தது 1900சதுர அடி இடம் தேவை. மணிமண்டபம் செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லை என்ற காரணங்களால் மாநகராட்சி ஆணையர் அனுமதி மறுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மணிமன்டபம் அமைக்க எந்த தடையும் இல்லை. ஆனால், ஏற்கனவே கட்சி அலுவலக வளாகத்தில் ஏற்கனவே கட்டிடம் உள்ளது. ஏன் அரசு ஒதுக்கும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூடாது?
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உடலை அடக்கம் செய்யலாமே? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முடிவு செய்ய வேண்டும். அரசின் முடிவில் தலையிட முடியாது. போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. இடம் உள்ளவர்கள் தானமாக தர தயாராக இருந்தால் அனுமதி வழங்க தயாராக இருக்கிறேன்.

பொதுமக்களும், கட்சி தலைவர்களும் வருகை தரும் இடம் என்பதால் கூடுதல் இடம் தேவை. இட வசதி இல்லாமல் அனுமதி கொடுத்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயரிழப்பு கூட ஏற்படலாம். சட்டத்திற்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடம் இருந்தால் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

தற்போது ஒரு இடத்தில் உடலை அடக்கம் செய்து விட்டு, பின்னர் இடம் வாங்கிய பின் உடலை தோண்டி எடுத்து மணிமண்டபத்தில் அடக்கம் செய்யலாம். மதியம் 12 மணிக்கு இடம் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

You may also like...