பணியில் இருந்த காவலர்களை மிரட்டிய செயல் ஏற்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பணியில் இருந்த காவலர்களை மிரட்டிய செயல் ஏற்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியிம் 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30-ம் தேதி நள்ளிரவு ராயபுரத்தில், தனது ஆதரவாளர்களுடன் மது அருந்தியிருந்ததாகவும், அவர்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, ரோந்து பணியில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் கூட்டமாக நின்றிருந்தவர்களைப் பார்த்து, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் “எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?” எனவும், “நான் இந்தப் பகுதி கவுன்சிலர் நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்” என்று ஜெகதீசன் மிரட்டியதாக தெரிகிறது.

இது தொடர்பாக காவலர் தியாகராஜன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜெகதீசன், சதீஸ், வினோத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது, கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகதீஸன், சதீஸ், அறிவழகன் வினோத் ஆகிய 4 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் உள்ள காவலர்களை மிரட்டும் இந்த நபர்களால் மற்றவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்றும், இதனை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்த நீதிபதி இது போன்ற செயல்களை ஏற்க முடியாது எனவும், தற்போதைய நிலையில் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் இது போன்ற செயல்கள் தொடர்வதற்கே வழிவகுக்கும் எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...