பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதா!

பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதா!

 

  1. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்! ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான மொழி , கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது..

 

  1. வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டை நிலை நிறுத்த மாநிலங்களுடைய இந்த பன்முகத்தன்மை இன்றியமையாததாகிறது! நமது அரசியலமைபு சாசனமானது சமூகத்தின் மாறிவரும் நிலைகளுக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் வரலாற்று ஆவணமாகும்! சமூக தேவைகளுக்கான தடைகள் நீக்கப்படாவிட்டால், அரசியலமைப்புச் சட்டம் சிதைந்துவிடும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி என்பது நமது அரசியலமைப்பின் இன்றியமையாத அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி மட்டுமின்றி மண்டலங்களைப் பிரிப்பது என்பது அரசியல் நிர்ணய சபையின் நீடித்த விவாதம் மற்றும் விவாதத்தின் விளைவாகும். மாநில அரசுகள் மக்களுடன் நெருக்கமாகவும், மக்களின் தேவைகளை சிறப்பாகத் தீர்மானிக்கவும் ஏற்ற துறைகளில் மாநிலங்களுக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும்  இணைந்து சட்டம் இயற்ற வேண்டிய சில துறைகளில், முரண்பட்ட சட்டங்களை சமரசம் செய்வதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254 உருவாக்கப்பட்டுள்ளது.

 

  1. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கல்வி என்பது மாநில அரசுகளின் முழு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். எனவே, அரசமைப்புச்சட்டம் இயற்றப்பட்டபோது மாநிலப்பட்டியலில் 11 அட்டவணையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அவசர நிலைக்காலத்தின்பொழுது, 1976 ம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் ( 42வது திருத்தம் ) கல்வியானது மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பொதுப்பட்டியலில் 25 வது  நுழைவாக இணைக்கப்பட்டது! இதன் மூலம் ஒன்றிய அரசால்  நிறுவப்பட்ட / நிர்வகிக்கப்படும் /  நிதியுதவி பெறும்  கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் சேர்க்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேவையை பெற முடியாது. உண்மையில் ஒன்றிய அரசு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற பல புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களை நிறுவியுள்ளது. இதேபோல், கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை நிறுவி நடத்தவும் ஒன்றிய அரசால் முடியும்.

 

  1. எப்படி இருந்தாலும், கல்வியை பொதுப்பட்டியலில் இணைத்ததன் மூலம், பாராளுமன்றத்தில் முதன்மையை விட்டுக்கொடுத்ததோடு, மாநிலங்களால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழங்களில் மாநில அரசுகளின் செலவில் சேர்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வால், மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் சுயாட்சி முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் பெரும்பாலான மாநிலங்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பெரிய முதலீடுகளை செய்துள்ளது. இதன் மூலம் பல மாநிலங்கள் கல்வி உட்கட்டமைப்பில் உயர் கல்வியறிவு விகிதங்களை அடைந்துள்ளன. இந்நிலையில்  மாநிலங்களின் ஒப்புதலின்றி திடீரென கொண்டுவரப்பட்ட  நீட் தேர்வினால்,  மாநிலங்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான மாநில அரசின்  உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது! மேலும் கல்வி தொடர்பான ஒன்றிய மற்றும் மாநில அரசின்  கொள்கைகள் பெரும்பாலும் வேறுபடுவதால் சில சமயங்களில் மாநில சட்டங்களுடனான  நேரடி மோதலுக்கு வழிவகுக்கிறது. மாநிலங்களால்  நடத்தப்படும் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாநிலத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது, ஒன்றியத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கையுடன் முரண்பட்டு, மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

 

  1. பள்ளிக்கல்வி என்பது ஒருவரது வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. அதனால் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக்கொள்கையானது வேறுபட்டு , மாநிலத்தின் தனித்தன்மை மிக்க கலாச்சாரம், அடையாளம், மொழி மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு ஏற்ப கல்வியை வழங்க மாநில அரசுகள் விரும்புகிறது. ஆனால் ஒட்டுமொத்த கல்வியும் ஒரே நேரத்தில் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ‘தேசிய கல்விக் கொள்கை’ போன்ற ஒன்றியத்தின் எந்தவொரு கொள்கையும் இந்தியா முழுவதும், கல்வித்துறையில் பன்முகத்தன்மையை சிதைக்கிறது. கல்வியை பொறுத்தவரையில் ஒரே நாடு ஒரே கல்வி என்பது போன்ற தத்துவங்கள் பொறுத்தமற்றது. கல்வி என்பது, கண்ணோட்டத்தை உள்ளடக்கியதாகவும், பரந்ததாகவும் இருக்க வேண்டும், பிரத்தியேகமாகவும் குறுகியதாகவும் இருக்கக்கூடாது. தற்போதைய நிலையில் கல்வி தொடர்பான சட்டங்களை மாநில சட்டமன்றம் இயற்றினாலும், அவை ஒன்றியச் சட்டங்களால் மாற்றியமைக்கப்படும் நிலை உள்ளது. ஏனெனில் மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசின் ஆலோசனையின் பேரில் நிறுத்தி வைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. அதே போல மாநிலங்களால் நடத்தப்படும் / நிறுவப்பட்ட / நிதியளிக்கப்பட்ட பள்ளிகளை ஒன்றிய அரசு  தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதனால் பன்முகத்தன்மை சிதைக்கப்படும்! கல்வி என்பது சமூகத்தின்  அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் சென்று அடைவதை மாநிலங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான மக்கள் நலத்திட்டங்களை மாநிலங்கள் மட்டுமே கொண்டு வந்து செயல்படுத்த முடியும் என்கிற நிலையில், மேற்கூறியபடி, கல்வியானது பொதுப்பட்டியலில் நீடித்தால் கூட்டாட்சி அமைப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்!

 

  1. ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் கல்வியை முறைப்படுத்தும் உரிமை, கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்க்கை உரிமைகள் போன்றவை ஒன்றிய அரசுக்கு உள்ளதுபோல, மாநில அரசின் கல்வி நிறுவனங்களில் கல்வியை முறைப்படுத்தும் அதிகாரம் எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத வகையில் மாநிலங்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்! எனவே, இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் திருத்தம் செய்து, பொதுப்பட்டியலில் (பட்டியல் 3) இருந்து நுழைவு 25 ஐ நீக்கி, பட்டியல் 2 மற்றும் பட்டியல் 1 இல் உள்ள அதிகாரங்களை சேர்த்து,  மாநிலங்களின் உரிமைகளில் ஒன்றியம்  தலையிட முடியாதபடி, மாநிலங்களுக்கும் – ஒன்றியத்திற்கும் சமமான அதிகாரங்களைப் பிரித்து அளிக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

 

You may also like...