மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். மீதமுளள 56.37 சதவீதத்தினருக்கு இந்தி தாய் மொழி அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை முறைச் சட்டம், உரிமையியல் விசாரணை முறைச் சட்ட பிரிவுகள், மாவட்ட மற்றும் விசாரணை நீதிமன்றங்களின் வழக்காடு மொழிகளை தீர்மானிக்க அதிகாரம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி மொழிச் சட்டப்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே நீதிமன்ற மொழிகளாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தி மொழியில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்; இந்த சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்; மூன்று சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...