மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ரவீந்தர் இரண்டு கோடி தந்துவிட்டதாக கூறுவது தவறு எனவும், தற்போது வரை 16கோடி ரூபாயை தரவில்லை என தெரிவித்தார்.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை மகாலஷ்மியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் இரண்டு கோடி ரூபாயை புகார்தாரருக்கு கொடுத்ததாக கூறும் ஆவணங்களை ஆராய்ந்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தன்னை திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், செப்டம்பர் 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஆஜராகி, புகாதாரருக்கு இரண்டு கோடி ரூபாய் அளித்துவிட்டதாக தெரிவித்தனர்.

புகார்தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ரவீந்தர் இரண்டு கோடி தந்துவிட்டதாக கூறுவது தவறு எனவும், தற்போது வரை 16கோடி ரூபாயை தரவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படும் ஆவணங்களை காவல்துறை சரிபார்த்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...