வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும் அதிமுக வக்கீல் கடிதம்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி திரு. வெங்கடாசலம் தற்கொலை, நெல்லை ராதாபுரம் உதவி பொறியாளர் திரு. சந்தோஷ் குமார் தற்கொலை போன்ற அரசு அதிகாரிகளின் திடீர் மரணங்களை சிபிஐ அல்லது ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஆணையம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியத் தலைமை நீதிபதி, மேதகு குடியரசுத்தலைவர், மத்திய புலனாய்வு துறை இயக்குனர் ஆகியோருக்கு வழக்கறிஞர்
ஆர்.எம்.பாபு முருகவேல் புகார் மனு.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது, காவல் கைதிகளின் சந்தேக மரணங்கள் (லாக்கப் டெத்), அரசு உயர் அதிகாரிகள் தற்கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல், நல்ல திறமையான நேர்மையான அதிகாரிகளை இயல்பாக செயல்பட விடாமல், லஞ்ச ஒழிப்புத் துறையை தன் பணியாளாக கருதி தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில் செயல்படக்கூடிய ஒரு துறையாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின்மீதும், உறவினர்களின் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சோதனை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது முற்றிலும் சமூகநீதிக்கு, சட்டத்திற்கு புறம்பானது என்பதை பல வழக்குகளின் மூலம் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது தற்சமயம் முன்னாள் வனத்துறை தலைமை அதிகாரி திரு. வெங்கடாசலம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியில் இருந்த போது ஆளுகின்ற அரசின் அழுத்தம் காரணமாகவும், அவரை பதவி விலகச் சொன்னதின் காரணமாகவும், பதவி நீட்டிப்பு வழங்கமுடியாது என மறுதலித்ததின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையை தவறாக பயன்படுத்தி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்குத் தூண்டி இன்று அவர் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்திருக்கிறார். திறம்பட இந்திய வனப் பணியில் பணியாற்றிய, ஒரு நேர்மை மிகுந்த, சமுதாய அக்கறை கொண்ட ஏறக்குறைய 35 ஆண்டு காலம் இந்திய அரசு பணியில் பணியாற்றிய ஒருவர் இதுபோன்ற மனப் உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் சட்டத்தை உற்றுநோக்குபவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற அரசு அதிகாரிகள், நேர்மையான அலுவலர்கள் மிரட்டபடுவதும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. ராயப்பா, முன்னாள் காவல்துறை அதிகாரி திரு. துரை, அண்ணாநகர் திரு. ரமேஷ், திரு. சாதிக் பாட்சா போன்ற மர்ம மரணங்கள் இதுநாள்வரை வெளிச்சத்திற்கு வராமலே இருக்கிறது. அதன் நீட்சியாக திரு. வெங்கடாச்சலம் அவர்களும், திரு. சந்தோஷ் குமார் அவர்களின் மரணமும் இணைந்திருக்கிறது.

இது போன்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பல வழக்குகளை விசாரணைக்கு எடுத்து நீதியை நிலைநாட்டி இருக்கிறது கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதவி பொறியாளர் திரு. சந்தோஷ் குமார் அங்கு பொறுப்பில் இருக்கக்கூடிய திமுகவின் முக்கிய நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ரயில் முன் பாய்ந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வு தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு உடனடியான மத்திய புலனாய்வுத் துறையினுடைய விசாரணை இந்த இரு நிகழ்விலும் தேவைப்படுகிறது.

மேற்சொன்ன இரண்டு அதிகாரிகளும் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கும், அந்த இரண்டு குடும்பங்களும் இன்று நிற்கதியானதற்கு காவல்துறையும், திமுக நிர்வாகிகளும், திமுக அரசும் தான் காரணம் இத்த காரணங்களுக்காகவும் மத்திய புலனாய்வு துறையின் தலையீடு அவசியமாகிறது.

நேற்று காவல்துறை தலைமை இயக்குனர் திரு. வெங்கடாசலம் அவர்களின் மரணத்தை சிபிசிஐடி விசாரிக்கும் என்று உத்தரவிட்டிருக்கிறார் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும், சிபிசிஐடி யும் தமிழக அரசாங்கத்திற்கு உட்பட்ட புலனாய்வு அமைப்பு சார்ந்தது அதனால் இந்த இரு நிகழ்வையும் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், திரு. வெங்கடாசலம் இந்திய வனப் பணி அதிகாரியாக இருந்தவர் எனவே அவருடைய மர்ம மரணத்தை இந்திய புலனாய்வு அமைப்பு விசாரித்தால் தான் உண்மை வெளிப்படும் இல்லை எனில் ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டியும், என்ற காரணங்களால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசருக்கு ம், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இயக்குனர் மத்திய புலனாய்வுத் துறைக்கும் புகார் மனுவை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி இருக்கிறேன்.

அன்புடன்,
ஆர்.எம்.பாபுமுருகவேல்,
வழக்கறிஞர்

You may also like...