1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான பெண்ணை விடுதலை செய்து நீதிபதி ஜூலியட் புஷ்பா அதிரடி உத்ததவு

சென்னை, நவ.15–
கஞ்சா மாதிரி மழையில் நனைந்து சேதமடைந்து விட்டது என்ற அரசு தரப்பு விளக்கம் நம்பத்தகுந்ததாக இல்லை என கருதிய சிறப்பு நீதிமன்றம், 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான பெண்ணை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருநின்றவூர் சுதேசி நகர் ஏரி அருகே, 2019 ஆக 26ல் பாலிதீன் பையில் 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த செல்வி,23 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, திருநின்றவூர் போலீசார் செல்வியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன் நடந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசன் வாதாடியதாவது:
வழக்கில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கு சொத்து ஐந்து மாத காலம் தாமதமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2019 ஆக.26 ல் கைப்பற்றப்பட்டு, 2020 ஜன.,23ல் தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தாமதத்துக்கு உரிய காரணங்களையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
விசாரணையின்போது, மாதிரியும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த மாதிரி மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கம் நம்பத்தகுந்ததாக இல்லை. வழக்கின் அடிப்படையில் இருந்தே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம்,’ சந்தேகத்துக்கு இடமின்றி, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதை நிரூபிப்பதில், அரசு தரப்பு தவறிவிட்டது.
விசாரணை அதிக சந்தேகத்துக்கு உரியதாக அமைந்துள்ளது. எனவே, வழக்கில் குற்றம்சாட்டப்ட்ட பெண் விடுதலை செய்யப்படுகிறார்’ என, தீர்ப்பளித்தார்.

You may also like...