/29, 00:49] Sethu Sir Dinamalar: சாதல் இனிது! °° சென்னையின் இதயப்பகுதியில் இருந்த அந்த பூங்கா நடைபாதையில் அமர்ந்திருந்தார் பார்வதி அம்மாள். (இது அவர் பெயரல்ல.) வயது 80 ஐ தாண்டி விட்டது

[8/29, 00:49] Sethu Sir Dinamalar: சாதல் இனிது!
°°
சென்னையின் இதயப்பகுதியில் இருந்த அந்த பூங்கா நடைபாதையில் அமர்ந்திருந்தார் பார்வதி அம்மாள். (இது அவர் பெயரல்ல.) வயது 80 ஐ தாண்டி விட்டது. அருகில் இருந்த பையை துழாவி, அதில் இருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தாள். மூக்கின் ஊடேயும், வாயிலிருந்தும் வெளியேறி காற்றில் கரைந்த புகையில் அவளின் கடந்த கால பிம்பங்கள் தோன்றி மறைந்தன.

இன்னும் சற்று நேரத்தில், அவள் பெற்ற உறவுகள், உணவு கொண்டு வந்து தருவார்கள். பாசத்துக்கு பஞ்சமில்லை. ஆனால், வயிறு, பசி உணர்வதில்லை. ஆனாலும் உள்ளுக்குள் வலிக்கிறது. நெஞ்சின் நடுப்பகுதியில் பெரும் பாரம்.

அவள் வாயில், அடுத்த சுருட்டு கனன்றது.

சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பரந்த பூமியில், மரங்களிலும், மண் தரையிலும், நடை பாதையிலும் எத்தனை உயிர்கள் நம்மைப்போலவே இளைப்பாறுகின்றன. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நல்லவேளை, நடைபாதைவாசிகளிடம், பூமித்தாய் வாடகை கேட்பதில்லை.

அவளுக்கு யார் மீதும் கோபமில்லை. தேவர்களுக்கு ஒரு யுகப்பொழுது நொடியில் கரைவதுபோல, அவளுக்கு நொடிப்பொழுது யுகமாய் கரைகிறது. நொடியின் கனத்தை அவளிடம்தான் கேட்க வேண்டும். வாழ்வின் இறுதியில் இருப்பவர்களுக்குத்தான் காலத்தின் நீள அகலம் புரியும்.

வாழ்வின் நீண்ட நெடிய பயணம், சிலருக்கு வரலாறாகவும், சிலருக்கு கோளாறாகவும் அமைந்து விடுகிறது. அதற்கான காரண கர்மாக்களை எங்கே தேடிப்பிடித்து தீர்ப்பது?. அன்பை மட்டுமே போதிக்கும், அப்பாவி உயிர்களுக்கு அவைவிளங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

வலியை தீர்க்கும் சுருட்டுகள் அவளிடம் கட்டுக்கட்டாக பையில் உள்ளன. அதை மட்டும் யாரோ தாராளமாக தந்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை சுருட்டு வேண்டுமானாலும் புகைக்கலாம். கேட்க யாருமில்லை.

பேசும் மொழி தெலுங்கு. வாழ்ந்த பூமி தமிழ்நாடு.

ஆந்திராவும், தமிழ்நாடும் பின்னி பிணைந்து கிடந்த சென்னை மாகாணத்தில் பிறந்தவள்.

கணவருக்கு பவர் ஹவுசில் (மின் வாரிய அலுவலகம்) பணி. ஆண்கள், பெண்கள் என்று பதினாறு குழந்தைகள் பிரசவித்து வாழ்ந்தவள். ஒரு நாள், வேலைக்குப்போன கணவர், கரன்ட் கம்பத்தில் இருந்து கீழே விழ, முதுகு தண்டில் அடி.

அப்போதுமுதல், நடக்க முடியாது. வேலைக்கும் செல்ல முடியாது.

பெற்றுப்போட்ட பதினாறு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டுமே?.

அவள் பரிதாப நிலையை பார்த்து அதிகாரிகள் உதவ முன் வந்தனர். வருகை பதிவேட்டில், தினமும் கணவர் கையெழுத்து போட வேண்டும். அவருக்கு பதில், பவர் ஹவுஸ் ஆபிசர்ஸ் சொல்லும் வேலைகளை அவள் செய்ய வேண்டும்.

புகைப்பதை எப்படி நிறுத்த முடியாதோ? அதேபோல், நினைவுகள் மனதில் பீறிடுவதையும் அவளால் நிறுத்த முடியவில்லை.

கால வேகத்தை நம்மால் நிறுத்த முடியுமா. அதன் போக்கில் பயணிக்கிறது. சில சமயம் மனதில் சிறைபட்டு தேங்கி விடுகிறது. எப்போதாவது அவை நினைவுகளாக விடுதலை பெறுகிறது.

பதினாறு பிள்ளைகளையும் ஆளாக்க வேண்டுமே?. அவர்களை கருப்பையில் சுமந்ததைபோல, கணவரையும் முதுகில் சுமக்க முடிவு செய்தாள். நடமாட முடியாத கணவரை தன் முதுகில் ஏற்றி, ‘உப்பு மூட்டை’யாக சுமந்தே நடந்து செல்வாள். பஸ்சில் ஏற்றி பயணமானாள். பவர் ஹவுசில் கணவர் கையெழுத்து போடுவார். அதிகாரிகள் தரும் வேலைகளை அவள் செய்து முடிப்பாள். இப்படியாக வருமானம். இப்படியாக வாழ்க்கை.
*
பொழுது விடிந்து விட்டிருந்தது. சூரிய கதிர்களால், பூமி புதுப் பொலிவு பெற்றிருந்தது. அவள் வயதை ஒத்தவர்களும், நடுத்தர வயதுக்காரர்களும், அவளை கடந்து கொண்டிருந்தார்கள். அந்த முகங்களுக்கிடையே, அவள் பெற்றெடுத்த உறவு முகங்கள் வருகிறதா என கண்களை இடுக்கி தேடிக்கொண்டிருந்தாள்.

கணவர் மறைவுக்குப்பிறகும் வாழ்க்கை வலிக்கவில்லை. பிள்ளைகளின் வீடுகளுக்கு மாறிமாறி பயணித்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் காலம் கரைந்து கொண்டிருந்தது.

எல்லா உயிர்களிடமும் விடை தெரியாத கேள்வி ஒன்று பயணப்படுகிறது. காலப்பயணத்தில், நாம் நிறைவுபெறுமிடம் யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதன் தொலைவு எவ்வளவு என்பதுதான் விடை தெரியாத கேள்வி.

வயோதிகமும் ஒரு பதவி போலத்தான். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சிலருக்கு அது கிடைக்கிறது. சிலரின் பயணம் அதை தொடாமலே முடிந்து விடுகிறது.

வயோதிக காலம் வனப்பாக, வசந்தமாக இருப்பதே வாழ்வின் அதிர்ஷ்டம்.
*
வயோதிக அடையாளங்கள் அவளிடமும் தோன்ற தொடங்கின. நீரிழிவு தாக்கத்தால் நாளுக்குநாள், உள்ளுக்குள் உருக்குலைந்தாள். அப்போதுதான் அவள் மனதின் வலி தொடங்கியது. இயற்கை உபாதைகள் அவள் மனக் கட்டுப்பாட்டில் இல்லாமல், தானே பிரிய தொடங்கின. அவளை கவனித்து வந்த பிள்ளைகளுக்கு பெரும் பிரச்சனை ஆயிற்று. நாற்றம் நாலாபுறமும் கிளம்ப, அவர்கள் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர்கள், வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுத்தனர்.
*
உயிரற்ற, உறவற்ற வெறும் கட்டடங்களே சொத்து என கருதும் மனிதர்களிடம், உயிரின் மதிப்பு வெறும் துாசுதான். ஊதி தள்ளிவிடுவார்கள்.

பெற்ற தாயை எங்கே வைத்து பராமரிப்பது? பிள்ளைகளுக்கு பித்துப்பிடித்து போனது. உரிமையாளர்கள் விரட்ட, விரட்ட பிள்ளைகள் வீடுகள் பேரப்பிள்ளைகள் வீடுகள், என வீடு, வீடாக மாறினாள் பார்வதி அம்மாள்.
*
நோயிலிருந்தும் விடுதலை இல்லை. உயிரிலிருந்தும் விடுதலை இல்லை.

கட்டிய கணவரை, முதுகில் சுமந்து திரிந்த காலங்களில்கூட இத்தனை வலி அவள் உணர்ந்ததில்லை. வீடு மாறி, வீடு மாறி …, பிள்ளைகளுக்கு கஷ்டம் தரக்கூடாதே. அந்த தாயின் மனது, அப்போதும் பிள்ளைகளின் வலியை மட்டுமே உணர்ந்தது.
**
ஆவி அடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்தாள். அதற்கான கொடுப்பினை இல்லை. ஒவ்வொரு நொடியும் உடலுக்குள் பயணிக்கும் மூச்சின் வலி அவள் நெஞ்சை பிசைந்தது.

பிள்ளைகளிடம் பேசியபின் அந்த முடிவுக்கு சம்மதித்தாள்;

‘‘வடக்க போற ஏதோ ஒரு ரயில்ல, ஏத்தி விட்டுருவோம். அம்மாவை ஆண்டவன் பாத்துப்பான்…’’

அவளுக்கும் சரியென பட்டது. தன் ஒருவளுடன் இந்த வாழ்வின் வலி தொலையட்டும். பிள்ளைகளுக்கு கஷ்டம் வேண்டாம்;
*
இதயத்தை இருள் சூழ்ந்த ஒரு பகலில், பார்வதி அம்மாள், ரயிலில் ஏற்றி அமர வைக்கப்பட்டாள். அருகில் எதுவும் அறியாததுபோல இரண்டு பிள்ளைகள். வடசென்னையில் புறப்பட்ட மின்சார ரயில், சென்ட்ரல் நோக்கி வேகமெடுத்தது.

ரயிலின் வேகத்தில், கட்டடங்கள் பின்னோக்கி ஓட்டமெடுத்தன. காலமும் இதே வேகத்தில் கடந்து சென்றால், நம் கர்ம கணக்குகளை வெகு சீக்கிரம் தீர்த்துக்கொள்ளலாமே?. வலியோடு நினைத்துப்பார்த்தாள் பார்வதி அம்மாள்.
*
‘‘யார் இந்த பெரியம்மா? கூட யார் வந்திருக்கா? எங்கே போறீங்க? ’’

அதட்டலான காவலர் குரல் கேட்டு திடுக்கிட்ட பிள்ளைகள், ஏதோ பேசி சமாளித்தார்கள். இந்த முடிவு வேண்டாம். இனி பிரச்னைதான்…

எதிர்முனை ரயிலுக்கு மாற்றி அமர வைக்கப்பட்டாள். மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். வழக்கம்போல், எந்த வீட்டு எஜமானர்களும் அந்த உயிரை வீட்டினுள் அனுமதிக்கவில்லை.

‘‘இங்கன இப்படியே பார்க்காண்ட விட்ருங்கடா. இங்கேயே கெடந்து செத்துப்போறேன்…’’

பிரிய மனமின்றி, பூங்கா வாசலில், கனத்த மனதுடன் தாயை அமர வைத்து சென்றன உறவுகள். வேளை தவறாமல் உணவு தந்தார்கள். பூங்கா வாசல்தான் அவள் வாசம்.
*
பையில் மீந்திருந்த கடைசி சுருட்டையும் பற்ற வைத்தாள் பார்வதி அம்மாள்.

அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. தன்னை முந்திக்கொண்டு சிவலோக பதவி அடைந்த ஒரு மகனின் மனைவியும், பிள்ளைகளும்.

‘‘ என்ன ஆயா, இங்க வந்து கிடக்க. வா, வீட்டுக்குப்போவோம்…’’

ஆண்டவனுக்கு திடீர் கரிசனம். ஆனந்தமாய் ஆட்டோவில் பயணப்பட்டாள். அங்கே பிரச்னை இல்லை. அது சொந்த வீடு. இனி அந்த உயிரை ‘வெளியே போ’ன்னு எவனும் சொல்லமுடியாது.
*
அம்மாவை காணோமே?

அன்றைய காலை உணவு கொண்டுவந்த மற்ற உறவுகள் திடுக்கிட்டன. தகவல் அறிந்து பின்னர் நிம்மதி அடைந்தன.

*
அலுவலகத்தில், ஊழியர்களுக்கு, தினமும் உணவு வழங்கும் அந்த இளைஞன் முகத்தில் பல நாளாய் சோகம். விசாரித்தபோது, இடி, மின்னல், மழைபோல தன் அன்பு ஆயா பார்வதி அம்மாளின் நினைவுகளை கொட்டித்தீர்த்தார்.

*
அந்த ஆயாவின் உஷ்ண மூச்சு காற்று தினமும் என் முகத்தில் நெருப்பாய் மோதியது.
சில நாட்களாய் அந்த இளைஞரை அலுவலகத்தில் காணோம்.
ஒருநாள் வந்தார். முகத்தில் ஒரு வெளிச்சம்..
விசாரித்தேன்…
‘‘ஆயா, போயிருச்சு சார்…’’
இனி, அவருக்கும் விடுதலை. ஆயாவுக்கும் விடுதலை.
*
‘போதும்…வாழ்க்கை’ என மனம் சொல்லும்போதே, உடலும், மனமும் உணரும்முன்பே, சட்டென உயிர் பிரிதல் அரிது.

பெரிதினும், பெரிய பிரார்த்தனை, ‘‘ஈசனே, போதும் பிறவி’’ என்பதே.

கடினமான கடைசி காலங்கள், அன்பையும், உறவையும் பொய்யாக்கும்!

‘‘யானேபொய்
என்நெஞ்சும் பொய்
என்அன்பும் பொய் – ஆனால்
வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே’’ என்று மாணிக்கவாசகர் சொல்வதுபோல், தொழுவோம்! அழுவோம்!
பார்வதி அம்மாளின் நிலை, இனி ஒரு முதியோருக்கும் வரவேண்டாம் என்று!
*
அன்புடன் சேது
[8/29, 07:37] sekarreporter1: super sir

You may also like...