sterlite case Aag Ravinthiren seek 3 months time to file report judges SS sunder and senthil Kumar bench agreed to adj case 3 months

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது எனக் கூறி, அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டி ஜி பி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்றும் இது போல் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் காவல்துறையினர் தங்கள் தவறை உணர வேண்டும் என்றனர்.

கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது என்பது தான் எங்கள் கவலை. இப்போதும் அந்த தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லோரும் எங்கு இருந்தார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கில் விசாரணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்.

….

You may also like...