பாம்பன் சாமிகள் வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் அவர்கள் ஆஜராகி, ஏற்கனவே பெருமன்றம் தொடர்ந்துள்ள வழக்கினையும் இவ்வழக்கினையும் ஒரே வழக்காக இணைத்தும், அறநிலையத்துறை சார்பில்

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதியினை முருகன் கோவிலாக மாற்றி இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த (12.07.2024) நடத்திய கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சைவ சித்தாந்த பெருமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பின்குறிப்பிட்ட விடயங்களை பட்டியலிட்டு வழக்கு (W.P.No.18970 of 2024) தொடர்ந்தது.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 30.05.1929 ஆம் ஆண்டு வட சென்னையின் நம்புள்ளைய்யர் தெருவில் காலை 7.15 மணியளவில் குகசாயுச்சியமடைந்தார். அவர் குகசாயுச்சியமடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் தமது பிரதம சீடரான சுப்ரமணியதாசரை அழைத்து விபூதி கொடுத்து திருவான்மியூரில் இடம் வாங்க சொல்லியிருந்தார்கள். திருவான்மியூரில் சுவாமிகளால் வாங்கப்பட்ட இடத்திலேயே 31.05.1929 அன்று சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டார்கள். மேலும் அந்த இடத்தில் சமாதி நிலையமும் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. சமாதி நிலையத்தில் கடவுள் திருமேனிகள் அமைத்து கும்பாபிஷேகம் செய்வது என்பது எந்த ஆகமத்திலும் சொல்லப்படாத விதிமுறையாகும். கடவுள் சிலைகளுக்கு பிரபந்த வெளியிலிருந்து ஆற்றலை பாலாலயம் செய்யப்பட்ட உருவத்திற்கு ஏற்றி, அதனை கும்பத்திற்கு மாற்றி, பின்னர் வேள்விகள் செய்து கும்பத்தில் இருக்கும் ஆற்றலை ஸ்தாபிக்கும் திருமேனி அல்லது சிவலிங்கத்திற்கு கடத்துவது தான் கும்பாபிஷேகத்தின் நடைமுறையாக அனைத்து ஆகமங்களாலும் வரையறுக்கப்படுகிறது. சமாதி நிலையம் என்பது ஞானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இந்த ஆற்றலை ஆகம முறையில் பாலாலயம் செய்து மாற்றுவது என்பது ஆகம விரோத செயல்பாடாகும்.

பாம்பன் சுவாமிகள் அப்பழுக்கற்ற ஒரு மகான் என்பதோடு, பாம்பன் தவத்திரு குமரகுருதாச சுவாமிகள் அத்தியாச்சிரம வைதிக சுத்தாத்வைத சைவ சித்தாந்தம் என்னும் தனித்த சைவ சித்தாந்த நெறியை ஸ்தாபித்த ஓர் ஞானபானு ஆவார். மாணிக்கவாசகப் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள், வள்ளல் இராமலிங்க அடிகளார் உள்ளிட்டோர் உடலோடு முத்தியடைந்த மரபின் தொடர்ச்சியாக, ‘நான் நுண்ணுடல் கொண்டு 500 ஆண்டு காலம் வாழ்வேன்’ என்று பாம்பன் சுவாமிகள் தனது தலையாய சீடராக கருதிய சுப்பிரமணியதாசரிடம் கூறிச்சென்றதாக தமிழ்த் தென்றல் திரு.வி.க கூறுகின்றார். சமாதியடைந்த ஞானியின் உடல் அருள்மயமானது என்கிறது திருமந்திரம். அப்படிப்பட்ட அருள்மயமான சுவாமிகளின் சமாதி நிலையத்தில் பாம்பன் சுவாமிகளின் நெறிமுறையினை பின்பற்றாமல், மகாகும்பாபிஷேகம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக ஒருவார காலத்திற்கு பன்னிசை, கலைநிகழ்ச்சிகள் என சமாதி நிலையத்தினை ஒரு பொழுதுபோக்கு இடமாக மாற்றும் விதமாக அழைப்பிதழ் பிரசுரித்துள்ளது அறநிலையத்துறை. சுவாமிகள் தனது காடிசில் மட்டுமல்லாது பல இடங்களில் மத்தளம், பாட்டுப் பாடுதல், வயலின் வாசித்தல் உள்ளிட்டவற்றை கட்டாயமாக செய்யக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

சைவ சித்தாந்தத்தின் பரம சாத்திரமாக கருதப்படும் பன்னிரு திருமுறைகளிலேயே, வழிபாட்டு முறைகளை விளக்கிக் கூறும் தமிழாகமமாம் திருமந்திரத்தில் திருமூலர் அருளியுள்ள சமாதிக் கிரியை மரபின் அடிப்படையிலேயே பாம்பன் சுவாமிகள் சமாதியினை அவர் குகசாயுச்சியமடைந்தபோது அவரது தலையாய சீடர்களும் அன்றைய மகாதேஜோ சபையாரும் அமைத்துள்ளனர் என்பதை திரு.வி.க எழுதியுள்ள (05.06.1929ஆம் நாளிட்ட) நவசக்தி இதழினையும் தருமையாதின வெளியீடாக உள்ள திருமந்திர நூலின் 1880 முதல் 1892 ஆம் பாடல் வரை அமைந்துள்ள பகுதியினை ஒப்பிட்டு பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் அறநிலையத்துறை பிரசுரித்துள்ள அழைப்பிதழில் காமிகாகமம், குமாரதந்திரம், அகோர சிவாச்சாரியார் பத்ததி உள்ளிட்ட ஆகம நூல்களின் வழியே கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர காமிக ஆகமத்தில் சமாதியமைக்கும் முறை பற்றிய தகவல்கள் உள்ளனவே தவிர, சமாதி நிலையத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எந்த விதியும் சொல்லப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், காமிக ஆகமப்படி சமாதி குழியில் உப்பு நிரப்பி அடக்கம் செய்ய வேண்டும் என்று தான் விதியுள்ளது. ஆனால் சுவாமிகள் தமது காசி யாத்திரை எனும் நூலில் 565ஆம் பாடலில், சமாதி அமைக்கும் நிலம் ‘உப்பு இல்லாத நன்னிலமாக அமைய வேண்டும்’ என்றும், 566வது பாடலில், ‘அவ்வாறு அமைக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத் திருவுறுவை அமைக்க வேண்டும்’ என்றும் கூறுகிறார். சுவாமிகள் சமாதியில் திருநீற்றினை பூசியும், குப்பாயத்தில் குவித்தும் தான் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. இது உத்தர காமிக ஆகமம் கூறும் விதிக்கு வேறானது என்பது வெளிப்படை. மேலும் சுவாமிகள் சமாதி நிலையத்தில் உருவத்திருமேனி எழுப்பிக்கவோ அல்லது முருகனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்யவோ எங்கும் கூறவில்லை. மேலும் சுவாமிகள் குமரவேல் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் 63வது பாடலில், ‘மடம் ஆலயங்கள் அமைத்து வாழ எண்ணிலேன்’ என்று குறிப்பிடுகிறார். மேலும் அவரது மிக முக்கிய நூலாக கருதப்படும் தகராலய இரகசியத்தில் எந்த இடத்திலும் அவர் உருவ வழிபாட்டை ஆதரிக்கவில்லை. அவரது உயில் சாசனம் மற்றும் காடிசில் உள்ளிட்டவற்றில் மயூரவாகன சேவன விழாவிலும் விக்கிரக வழிபாடு கூடாது என்கிறார். அவ்வாறு நேரடியாகவே சுவாமிகள் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதற்கு மாறாக அவரது சொந்த பணத்தில் வாங்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்ட இடத்தின் மேலேயே மயூரநாதர் ஆலயம் அமைப்பது சுவாமிகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது. பாம்பன் சுவாமிகள் அதி தீவிர முருக பக்தராக வாழ்ந்து, குகனடி சேர்ந்தார் என்பதிலோ, முருகனை முன்னிறுத்தி 6666 பாடல்கள் பாடியருளியுள்ளார் என்பதிலோ எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை ஏற்கனவே உலகம் முழுவதும் பரவியுள்ள முருகன் கோவிலில் செய்ய வேண்டுமேயொழிய, சுவாமி சமாதியில் முருகனை நிறுவக் கூடாது. அறநிலையத்துறை அழைப்பிதழில் ‘அகோர சிவாச்சாரியார் பத்ததி’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மாதவ சிவஞான முனிவர், ‘அகோர சிவாச்சாரியார் ஒரு சிவசமவாதி’ எனவும், ‘அவர் தானே எழுதிக்கொண்ட பத்ததிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். எனவே, இதுவும் சைவ சித்தாந்த நெறிமுறைக்கு வேறானதாகும்.

பாம்பன் சுவாமிகள் வாழ்ந்த இடமான ஜார்ஜ் டவுனிலோ, பின்னத்தூரிலோ, அவரது சொந்த ஊரான பாம்பனிலோ அவருக்கென்று தனித்த அடையாளங்கள் ஏதும் இல்லை. திருவான்மியூரில் அவர் தனது சொந்தப் பணத்தில் வாங்கிய இடமே அவரின் பெயரையும் அவர் காட்டும் அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த கோட்பாட்டையும் அவர் வருடந்தோறும் செய்துவரச் சொன்ன மயூரவாகன சேவன விழாவையும் செய்வதற்கான இடமாக இருந்து வருகிறது. மேலும் சுவாமி ஜீவன் முத்தியடைந்து 95 ஆண்டுகள் நிறைவுற்றது. இன்னும் ஐந்தாண்டு காலங்களில் அந்த இடம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக சட்டரீதியாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். அவரது சமாதி நிலையத்திற்கு மேல் கோவில் கட்டினால் அது சுவாமியின் பெயரையும் அவரது நெறிமுறைகளையும் மறைக்கும் இடமாக மாற்றப்பட்டுவிடும்.

இதற்கு முன்பு 1958ஆம் ஆண்டு அங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக அறநிலையத்துறையினர் கூறுகின்றனர். ஆனால் கோபுரம், விமானம், கலசம் உள்ளிட்ட கோவில் என்பதற்கான அடிப்படை விடயங்கள் எதுவும் இல்லாமல் இருந்த இடத்தில் எங்கனம் கும்பாபிஷேகம் செய்திருக்க முடியும்? எந்த ஆகமமும் சமாதிக்கு மேலே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சொல்லவில்லை. சமாதி எப்படி அமைய வேண்டும் என்பதை திருமந்திரம் மிக விரிவாக குறிப்பிடுகிறது. அந்த மரபையே காசி யாத்திரை எனும் நூலில் சுவாமிகளும் குறிப்பிடுகிறார். திருமந்திர முறைப்படியே சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது திரு.வி.க குறிப்பிடுவதில்லிருந்து மிகத் தெளிவாக தெரிகிறது. சமாதியில் பொதுவாக லிங்கத்திருவுருவமே அமைக்கப்பட வேண்டும் என்று திருமந்திரத்திலும், காசி யாத்திரை நூலிலும், உத்தர காமிக ஆகமப்படியும் கூறப்பட்டுள்ளது. இங்கு அந்த விதியும் பின்பற்றப்படவில்லை.

எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களால், பாம்பன் சுவாமிகள் சமாதி நிலையத்தினை, சமாதி நிலையமாகவே தொடர்ந்து இருக்க வைக்கவும், அங்கு திருமந்திர முறைப்படியும் சுவாமிகள் கூறியுள்ள நெறிப்படியும் பூசைகள், விழாக்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும் என்றும், அங்குள்ள சமாதி நிலையத்தை மறைத்து, முருகன் திருக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதை நிறுத்த வேண்டியும் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி திரு.ஆர்.மகாதேவன் அவர்கள் முன்பு மூன்று நாட்களாக (09.07.2024, 10.07.2024 & 11.07.2024) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் இன்று பாம்பன் சுவாமிகள் சமாதியில் ஏற்கனவே மயூரநாதப் பெருமான், விநாயகர், பாம்பன் சுவாமிகள் விக்கிரக உள்ளிட்ட சிலைகளை மகாதேஜோ மண்டல சபையினர் வைத்திருந்ததாகவும், அங்கு 1958ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்காததால் அது சமாதியா அல்லது கோவிலா என்று நீதிபதி அறநிலையத்துறையிடம் கேட்க, அது கோவில் தான் என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சமாதியா அல்லது கோவிலா என்று விவாதித்து முடிவெடுக்க நீதிமன்றம் 4 வார காலங்களுக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதுவரை அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விடயங்களில் நீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

…………………………………………………………..

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 13,2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அவர்கள் அறநிலையத்துறை சார்பில் இவ்வழக்கிற்க விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் இரண்டு வார காலங்களுக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் பாம்பன் சுவாமிகள் சமாதி நிலையம் குறித்த மேலும் ஒரு வழக்கினை (WP.24739/2024) தொடரப்பட்டது. பாம்பன் சுவாமிகள் சமாதியினை கோவிலாக கருதக்கூடாது என்றும் பாம்பன் சுவாமிகளின் உயில் சாசனத்தின் அடிப்படையிலேயே அங்கு பூசைகள், விழாக்கள் நடைபெற வேண்டும் என்றும் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு ஆகஸ்ட் 29,2024 அன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் அவர்கள் ஆஜராகி, ஏற்கனவே பெருமன்றம் தொடர்ந்துள்ள வழக்கினையும் இவ்வழக்கினையும் ஒரே வழக்காக இணைத்தும், அறநிலையத்துறை சார்பில் இவ்வழக்கிற்கும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியும் நீதிபதிகள் முன்பு கோரினார். அறநிலையத்துறை சார்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜாரனார். இரண்டு வழக்கிற்கும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது.

You may also like...