கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து, வருவாய் ஈட்டும் வகையில் கலாச்சார மையம் கட்டப்படுவதாகவும், இதை முடக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், பசுமை வழிச்சாலையில் காலியாக உள்ள கோவில் நிலத்தில் கலாச்சார மையமும், சிலைகள் பாதுகாப்பு மையமும், ஆன்மீக நூலகமும் கட்டப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், கோவில் நிதியில் கட்டப்படும் கலாச்சார மையம் மூலம் கிடைக்கும் வருமானம் கோவிலுக்கு தான் செல்லும் என்பதால், கட்டுமானத்தை நிறுத்தி வைத்த உத்தரவை நீக்கி, கட்டுமானத்தை தொடர அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில்மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...