temple kabaleeswar land case dkj bench ?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய பெண்கள் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலம், இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்புக்கு, 2010ம் ஆண்டு முதல், 29 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

40 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படாததால் கோவிலுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் ஆடிட்டரை நியமித்து, இழப்பீட்டை கணக்கிட்டு, கோவிலுக்கு உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை தரப்பில், நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக ஆட்சேபங்கள் கோரிய போது, 2012ல் மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போது அந்த நிலத்துக்கு 4 லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெறக் கூறி 2013ம் ஆண்டு அறநிலையத் துறை ஆணையர் அளித்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்துசமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

You may also like...