தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கோவில்களுக்கு சொந்தமான 80 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை தொகை செலுத்தாமல் உள்ளதால், மாவட்ட வாரியாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை கண்டறிந்து, சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி தாக்கல் செய்த அறிக்கையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 22 ஆயிரத்தி 82 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் 79 ஆயிரத்து 62 ஏக்கர் நிலத்தை 33,000 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகைக்கு எடுத்தவர்கள் அதற்கான உரிய தொகை தராதவர் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

You may also like...