Special court directed minister to appear

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வரும் 30 தேதி ஆஜாரக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல், ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், க.முருகையா, டி. உதயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் காவல் துறை இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவர் மீதான வழக்கை ரத்து செய்ததும் வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை அவரின் தரப்பில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யபட்டது. இதனை ஏற்று கொண்டு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் குற்றச்சாட்டு பதிவிற்காக ஐ.பெரியசாமி வரும் 30 தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக வில்லை என்பதால் தொடர்ந்து 9 ஆவது முறையாக குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

You may also like...