தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கெளதமன் குறுக்கு விசாரணை செய்தார்.

  • அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை பதிவு செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கியதை அடுத்து, 15 மாத சிறைவாசத்துக்கு பின், செந்தில் பாலாஜி கடந்த வாரம் விடுதலையானார்.
  • அவருக்கு எதிரான அமலாக்க துறை வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அன்றையதினம் ஆஜராகாத அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
  • இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார்.
  • வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்காமல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியுமா? என உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கேட்டுக் கொண்டார்.
  • அதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
  • இதன் பின் தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கெளதமன் குறுக்கு விசாரணை செய்தார்.
  • இதையடுத்து நடத்தப்பட்ட சாட்சி விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, குற்றவாளி கூண்டில் அமர வைக்கப்பட்டார்.
  • தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...