சிறப்பு பள்ளிகளில், ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயித்து கொள்கை முடிவெடுத்து, மாணவர்களை கவனிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில், ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயித்து கொள்கை முடிவெடுத்து, மாணவர்களை கவனிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செயல்படும் காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத் திறனாளி, 35 பார்வை மாற்றித் திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர்.

பார்வை மாற்றித் திறனாளி மாணவர்களை கவனித்து வந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால், அந்த மாணவர்களையும் சேர்த்து கவனிக்கும்படி காதுகேளாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியர் காயத்ரி-க்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வரும் தனக்கு ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, ஆசிரியர் காயத்ரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு முதல் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல, இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுப்பதுடன், போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இதுசம்பந்தமாக விரிவான மனுவை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...