Acj bench தக்கார்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயித்து ஏன் விதிகளை வகுக்க கூடாது என, அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

தமிழக கோவில்களி்ல் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என இநது சமய அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறநிலையத் துறை தரப்பில், 31 ஆயிரத்து 163 கோவில்களி்ல் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதாகவும், 10 ஆயிரத்து 536 கோவில்களில் அறங்காவலர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரத்து 814 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

3 ஆயிரத்து 749 கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான நடைமுறைகள் நடந்து வருவதாகவும், வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், 20 ஆயிரம் கோவில்களில் அறங்காவலர்கள் பதவிக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான பணிகளை முடிக்க முடியாததால், நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி அறநிலையத் துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளைக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், கோவில்களில் தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளை நீக்கக் கோரியும், தக்கார்கள் நியமனம் தொடர்பாக தகுதியை நிர்ணயித்து விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தக்கார்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயித்து ஏன் விதிகளை வகுக்க கூடாது என, அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...