assembly case smsj bench order for gov ag / for admk inbadurai argued

முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், 2017ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அந்த நோட்டீஸ் காலாவதியாகி விட்டதாக கூறினார்.

இந்நிலையில், முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை ஒன்பதாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You may also like...