Bank account freeze /suriya pragasam adv case Navj order notice

சென்னை: அறிவிப்பின்றி சட்டவிரோதமாக வங்கி கணக்கை முடக்கி உத்தரவு பிறப்பித்ததால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:

ராயப்பேட்டையில் உள்ள, ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்தாண்டு நவம்பரில், திடீரென சேமிப்பு கணக்கை பயன்படுத்த முடியவில்லை.

வங்கியை அணுகிய போது, ‘சென்னை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்படி கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என்றனர். சைபர் கிரைம் போலீசாரிடம் விளக்கம் கேட்ட போது, ‘பொருளாதார குற்றத்தில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் தொடர்புள்ளதால் முடக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த விபரத்தில், ‘2023 ஜூன், 29ல், 1 லட்சம் ரூபாய் வரை மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது; அதன்படி கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என, சைபர் கிரைம் போலீசார் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

பின், 2023 டிசம்பர், 1ல் அளித்த கடிதத்தின்படி, முடக்கப்பட்ட கணக்கை விடுவித்தனர். ஆனால், எவ்வித அறிவிப்பும் வழங்காமல், வங்கி கணக்கை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம். இதற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வங்கி கணக்கை முடக்கி, சட்டவிரோத உத்தரவை பிறப்பித்த போலீஸ் அதிகாரியின் பெயரை கேட்டு, ஏப்ரல், 29ல் நோட்டீஸ் அனுப்பினேன்; அதற்கு எவ்வித பதிலும் இல்லை. சட்டவிரோத உத்தரவை பிறப்பித்த அதிகாரியை கண்டறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அரசின் உள்துறை செயலர் மற்றும் காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அக்., 21ல் வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவும், அன்றைய தினம் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், நீதிபதி தெரிவித்தார்.

You may also like...