Former minister jayakumar case Urban local body election case Former Minister Jayakumar filed a writ petition came up before Honble justice Duraisamy bench, lordship ordered election commission to file a compliance report on 3rd of January 2022.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாக நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளில்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில்,
அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்ற உத்தரவிட்டும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிய காரணமின்றி அதிமுக வினரின் வேட்புமனு நிராகரிப்பு, பணம் விநியோகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் ஆகியோர் தேர்தல் அலுவலர்களோடு கூட்டம் என முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது தொடர்பாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென நவம்பர் 1ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும்,வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்,.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்

தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006 – 2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,
உயர்நீதிமன்றம் தலையிட்டு ஒரு வார்டின் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும்,இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில் விஜய் நாராயண் ஆஜராகி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தவுகளை நகர்புற தேர்தலிலும் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். மேலும் வேட்புமனுவில் கூடுதலாக இணைக்கப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்பட்டு அல்லது மாயமாகி, அதனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே எத்தனை பக்கங்கள் உள்ளது என்பதற்கான சான்றளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பாக ஆணையத்திடன் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். அதேசமயம் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் முறையாக பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...