gov order ரத்து செய்தவர் நீதிபதி தண்டபாணி order quashed jdge dandabani

சென்னை, ஜூன் 24–
குளம், ஏரிகளில் மீன் பிடிக்கும் குத்தகை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கம் உள்பட பல கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விபரம்:
ஏரி, குளம், கால்வாய், முகத்துவாரம் ஆகிய நீர் நிலைகளில், மீன் பிடிக்கும் குத்தகைக்கு விடும்போது, மீன் பிடிக்கும் தொழில் ஈடுபட்டிருக்கும் மீனவர்கள், பட்டியலினத்தவர்கள் உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவு சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, 1993ல் தமிழ்நாடு மீன்வளத்துறை அரசாணை பிறப்பித்தது.
அதில், இந்த கூட்டுறவு சங்கங்கள் குத்தகைக்கு எடுக்க முன் வராதபட்சத்தில் மட்டுமே, பொது ஏலம் வாயிலாக குத்தகைக்கு வழங்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை இன்று வரை நடைமுறையில் உள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த மீன் பிடி குத்தகை தொடர்பான வழக்குகளில், சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பின், தமிழ்நாடு மீன் வளத்துறை கமிஷனர் 2022 ஜன 4ல் பிறப்பித்த அரசாணையில், பொது ஏலத்தின் அடிப்படையில், அதிக விலை கோருபவர்களுக்கு மீன் பிடி குத்தகை வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
கடந்த 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலுவையில் உள்ள போது, இந்த புதிய அரசாணை பிறப்பித்தது தவறு. அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் வக்கீல் உள்பட பலர் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை தவறாக புரிந்து, 2022 ஜன 4ல் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 1993ல் பிறப்பித்த அரசாணைக்கு முற்றிலும் முரணாக உள்ளது. எனவே, 2022ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.
மீன் பிடி குத்தகை விடும்போது, 1993ல் பிறப்பித்த அரசாணையை பின்பற்ற வேண்டும். அதாவது, கலெக்டர் நிர்ணயிக்கும் தொகையை ஏற்று குத்தகை எடுக்க, இந்த கூட்டுறவு சங்கங்கள் முன்வரவில்லை எனில், உள்ளூர் பஞ்சாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒரு வேளை அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இருந்தால், அல்லது கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகமும் குத்தகை எடுக்க விரும்பினால், பொது ஏலம் வாயிலாக குத்தகை விட வேண்டும்.
மீன்களை அதிகம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, நீரை மாசுப்படுத்தக்கூடாது. நீரை மாசுப்படுத்தி, அதை விவசாய பயன்பாட்டுக்கு வழங்கி நிலத்துக்கு தீங்கு ஏற்பட்டால், மீன் பிடி குத்தகையை ரத்து செய்ய, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like...