GP Edwin prabagar பரபரப்பு வாதம்#கள் விற்க அனுமதிக்க மாட்டோம் மாநில அரசின் கொள்கை முடிவு #

தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்–கில் ஊழல் நிலவுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு எனவும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும்; சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதே சமயம் டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...