https://www.youtube.com/live/WXn9Hw6gpKc?si=jLlj1CeVxky1YAst Madras university vc chancellor appointment case cj order

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காக ஆளுநர் தேடுதல் குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு, கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்காததை எதிர்த்த வழக்கில் முடிவு காணும் வரை, துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பது குறித்து ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன், கடந்த செப்டம்பர் 6ம் தேதி, ஆளுநர் ஒரு தேடுதல் குழுவை நியமித்துள்ளார். அந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியும் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த குழு நியமனத்தை எதிர்த்து அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு ஜனவரி 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...