judge anitha sumanth issued arrest warrent

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 1987ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதும், 2008ம் ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு தாக்கல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளர் அந்தோணிசாமிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8 ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.

….

You may also like...