Madras high court april 4 th orders

[4/4, 11:43] Sekarreporter: கடந்த 1980களில் வெளியான 20 தமிழ் திரைப்படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும் படி, இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட இரு மியூசிக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை, பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை என கூறி, அவற்றை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த மனுவில், பட தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி கம்பெனிக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும், பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
[4/4, 12:20] Sekarreporter: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன் இந்து விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், 2010ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 2021ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்குகளை ரத்து வேண்டும் என்றார்.

இதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் இல்லை எனவும் புகார் மட்டுமே தாமதமாக அளிக்கப்பட்டதாகவும் இதனை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றார். சிவசங்கர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் மைனர் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சிவசங்கர் பாபா மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[4/4, 13:41] Sekarreporter: குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[4/4, 15:27] Sekarreporter: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, இதுதொடர்பாக கொள்கையை வகுக்க அவகாசம் கோரியிருந்தது.

இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க எட்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேலும், தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி துவங்கி விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[4/4, 17:09] Sekarreporter: சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழக முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியுள்ளதாகவும், இதில் 23 வகையானவை உடனடியாக கவனம் செலுத்தி அப்புறப்படுத்த வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இவற்றை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டத்திற்காக 5 கோடியே 35 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்களிலும், தர்மபுரி பகுதியிலும் உள்ள 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவது என முதல்கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான மரங்கள் மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[4/4, 19:22] Sekarreporter: நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்திற்கு அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்த அனுமதித்ததில் முறைகேடு தொடர்பான புகாரை ஊழல் தடுப்பு போலீசார் விசாரிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், விவசாயத்திற்காக ஆற்றிலிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீரை எடுப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், அவரது குடும்பத்தினரும் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்துக்கு மட்டும், 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை கூடுதலாக 15 குதிரை திறனாக மாற்ற அனுமதி அளித்து, நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த உத்தரவு அதிகாரதுஷ்பிரயோகம் செயல் என்றும், நடத்தை விதிகளை மீறிய முறைகேடு என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், அவர்களை பெயர்களை நீக்கி,புதிதாக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரில் எடப்பாடி இணைப்பு வாங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீசாருக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்ண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு போது, எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இந்த அரசாணை தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த அரசாணைக்கு எந்தவொரு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், இது கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின் கீழ் வருவதால் ஊழல் தடுப்பு போலீசார் விசாரிக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
[4/4, 20:11] Sekarreporter: பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.

அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், 15 நாட்களுக்கு பின் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை வழங்கவும் முதல்வர் கோரி உள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள், பள்ளி முதல்வர் ஆனந்தனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 30 ஆயிரம் ரூபாயை புகார்தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
[4/4, 22:15] Sekarreporter: சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள நின்னக்கரை ஏரியைச் சுற்றிய பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரை விடுவதால் ஏரி மாசுப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைவதாக கூறி, நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி, கடந்த 2018ல் இளங்கோவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வுல் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நேரில் ஆஜரானார்.

அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதில் மூலம் வாரியம் தொடங்கப்பட்டதின் நோக்கம் அர்த்தமற்றதாகிறது எனவும் தெரிவித்தனர்.

அதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்ட விதிகளை பின்பற்றாத உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு கோர தொடங்கியுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...