Madras high court feb 28 orders ஐகோர்ட் உத்தரவு

[2/28, 11:27] Sekarreporter 1: மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த 19 ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4ம் தேதி நடக்க உள்ள மறைமுக தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் எனவும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை எனவும் விளக்கமளித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராவில் ஆடியொ பதிவாகாது என்பதால், வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை கடத்தியதாக மனுதாரருக்கு எதிராக புகார் உள்ளதாகவும், அது குறித்து வ்ழக்கு பதிந்துள்ளதாகவும், எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை எனவும், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம் எனவும் நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, நீதிமன்ற உத்தரவின்படியும், தேர்தல் ஆணைய அறிவிப்பின் படியும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யப்பட்டதால், மறைமுக தேர்தலில் அதை மாற்ற வேண்டாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.
[2/28, 13:33] Sekarreporter 1: அரசு உத்தரவின் அடிப்படையில் ஏரியின் ஒரு பகுதி மயானமாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்த வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு ஏக்கர் பரப்பளவிலான செங்குட்டை என்ற ஏரி இருப்பதாகவும், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த வேளாண் நிலங்களுக்கு நீராதாரமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் செங்குட்டை ஏரியின் ஒரு பகுதியை மயான பூமியாக மாற்றம் செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மரணமடையும்போது அவர்களின் உடலை ஏரிப்பகுதியில் அடக்கம் செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், ஏரி நிலத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.
[2/28, 16:06] Sekarreporter 1: தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அவை நகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், பூஜாரிகளுக்கும் அறநிலைய வழங்குவதாகவும், அந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதை மறுத்து அறநிலையத் துறை தரப்பு, மறுதானம் செய்யப்படும் பசுக்களை முறையாக பாதுகாப்பது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பசுக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில், தானமாக பெறப்பட்ட பசுக்கள் மற்றும் தானமாக கொடுக்கப்பட்ட பசுக்களின் விவரங்கள் பதிவு செய்து பராமரிக்கப்படுவதாகவும், தற்போது கோவிலுக்குள் 77 பால் கொடுக்கும் பசுக்களும், கோவிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலம் ஒதுக்கி, 74 பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறுவது தவறு எனவும், கால்நடை மருத்துவர்கள் இந்த பசுக்களை அடிக்கடி ஆய்வு செய்து வருவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர், கோவில் பூஜாரிகளுக்கு, பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றார்.

இதையடுத்து, பூஜாரிகளுக்கு பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்தி விட்டு, அவற்றை கோசாலைகளுக்கு அனுப்பலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களையும், மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களையும் தெரிவிக்கும்படி, கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/28, 16:06] Sekarreporter 1: பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுவதாகவும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டபட்டது.

அப்போது நீதிபதிகள் பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர். தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழகத்தில் உற்பத்தியை மட்டும் ஏன் தடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பியதுடன், பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதா அல்லது ஊக்குவிப்பதா என அரசு உரிய முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுவதாகவும், ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருவதாகவும், டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சப்பை திட்டம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம் என தெரிவித்ததுடன் நீதிபதிகள், குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் பிளாஸ்டிக் தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

அதன்படி முதல்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/28, 16:50] Sekarreporter 1: திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..

உள்ளாட்சி தேர்தலில்ல கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி, வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது ….

புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார், உடலில் காயங்கள் இல்லை மனுவில் தகவல்…

கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு, மருத்துவ அறிக்கையையம் காயங்கள் இல்லை, அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது – ஜெயக்குமார் மனுவில் தகவல்..

உயர்நீதிமன்ற நீதிபதி பெங்கியப்பன் முன் மனு விரைவில் விசாரணை…..
[2/28, 16:55] Sekarreporter 1: திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்ற கடந்த 19 ஆம் தேதி கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யபட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கின் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி அல்லி தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும், கைதாகி சில நாட்களே ஆவதாலும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் உடலில் காயங்கள் இல்லை எனவும் அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும் மருத்துவ அறிக்கையையம் காயங்கள் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து காவல்துறை வேறு வேறு வழக்குகளில் காவல்துறை கைது செய்வதாகவும் இதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாகவும் எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
[2/28, 17:24] Sekarreporter 1: நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊட்டி செல்லும் நீலகிரி மலை ரயிலில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பதிலாக தண்ணீர் கேன்கள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி மலை ரயில் பாதையில் கொட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ரயில் பாதையில், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு, கட்டிட கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/28, 17:25] Sekarreporter 1: வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றி தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அன்னிய மரங்களை அகற்றுவது தொட்ஸ்ரீபான வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக வனத்துறையினர் இதுசம்பந்தமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், யூகாலிப்டஸ் போன்ற அன்னிய மரங்களை அகற்றுவதற்காக நபார்டு வங்கி 6 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசிடம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நபார்டு வங்கி ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி, அன்னிய மரங்களை அகற்றி, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/28, 17:25] Sekarreporter 1: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காட்டு யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், இக்குழுவில் கேரள அதிகாரிகளை சேர்ப்பது குறித்து அம்மாநில அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கேரள வனத்துறை சார்பில் ஆஜராகியிருந்த அம்மாநில அரசு வழக்கறிஞர், மலையாட்டூரில் 18 காட்டு யானைகள் கொல்லப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த, பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரி மனுசத்தியனை நியமிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் யானைகள் வேட்டையை தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவில் விலங்குகள் வேட்டை தொடர்பான முக்கிய வழக்குகளை, மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்தலாம் என தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/28, 22:02] Sekarreporter 1: மஹேந்திரா அண்ட் மஹேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹேந்திராவுக்கு எதிரான நம்பிக்கை மோசடி புகாரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், மஹேந்திரா கார் அதிகாரப்பூர்வ டீலரான ராஜராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் கார் ஒன்று முன்பதிவு செய்து, முழு தொகையான 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி வாகனத்தை வழங்காததால், மஹேந்திரா அண்ட் மஹேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா மற்றும் டீலருக்கு எதிராக புதுச்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2017ல் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை ரத்து செய்யக் கோரி ஆனந்த் மஹேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், டீலருக்கும், புகார்தாரருக்கும் இடையிலான பிரச்னையில், எந்த பரிவர்த்தனையிலும் தொடர்பில்லாத தனக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் ஆனந்த் மஹேந்திராவை நேரில் சந்தித்ததாக புகார்தாரர் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றும், டீலருடனான பிரச்னையில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி, புகாரை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...