Madras high court news oct 27

[10/26, 12:06] Sekarreporter 1: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள கோவில் திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மதேவர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடத்தப்படுவதுண்டு.

இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிவதால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கும்படியும், அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது எனவும், விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை விட்டுவிட்டு செல்வதாலும், பட்டாசுகளை வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, கோவில் விழாவுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், அனைத்து துறைகளின் அனுமதித்த பிறகே பக்தர்கள் வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும், திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/26, 14:25] Sekarreporter 1: ஆந்திரா மாநில சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழர்கள் தாக்கியதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் முறை பழுதாக இருப்பதாக கூறி, இரு மடங்கு சுங்ககட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட தமிழகத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களையும், இழிவாக பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்களையும், ஆந்திர தமிழர்களை கொடுரமாக தாக்கிய குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றம் அருகே நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

சுங்கச்சாவடியினர் மற்றும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்திர அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்தும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[10/26, 16:31] Sekarreporter 1: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார்.

அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

2022 ஜூலை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, பதவி உயர்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆசிரியர் சக்திவேல் தரப்பில், தகுதியில்லாத அசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிடப்பட்டது.

மத்திய மாநில அரசுகள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம் எனவும், சிறந்த கல்வித்தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதிலிருந்து, அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[10/26, 18:10] Sekarreporter 1: வர்த்தக சின்ன பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.

அந்த மனுவில், மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோ போல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
[10/26, 18:11] Sekarreporter 1: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையை தளர்த்த காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சயான் தரப்பில் கேரளாவில் வசித்து வருவதால் ஒவ்வொரு வாரமும் ஊட்டிக்கு வந்து கையெழுத்திடுவது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

You may also like...