Madras high court october 17th 9 orders sivaji case raka

[10/17, 11:04] Sekarreporter 1: இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திராம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது

கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
[10/17, 11:44] Sekarreporter 1: சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதால், சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரி சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பனா சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது.

கூடுதல் மனுக்கள் மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று உத்தரவிட்டார்.
[10/17, 11:44] Sekarreporter 1: சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்ககோரிய வழக்கு..

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி..

சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக மகள்கள் சாந்தி, ராஜ்வி வழக்கு..

பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை சொத்துக்களை விற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது- நடிகர் பிரபு தரப்பு..

சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது- தனியார் கட்டுமான நிறுவனம்.
[10/17, 14:49] Sekarreporter 1: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் நவம்பர் 7ம் தேதி இறுதி விசாரணை…

திமுக எம்.எல்.ஏ. எழிலனின் அறம்செய்ய விரும்பு அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு…

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது மாநில பட்டியலில் இருந்து கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு…

அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு விசாரணை…
[10/17, 14:52] Sekarreporter 1: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி, நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில், முழுமையான இறுதி விசாரணைக்கு முன் வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/17, 15:26] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அபராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, த்மிழக அரசுத்தரப்பில் ஆஜாரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[10/17, 17:18] Sekarreporter 1: எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ்.

பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுமி, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பள்ளி முடிந்து, யோகா பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு, ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
[10/17, 17:20] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆகஸ்ட் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் எனவும், இரு ஆசிரியைகளும் சேலம் செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

நான்கு வாரங்களுக்கு பின், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

முதல் நான்கு வாரங்கள் நிபந்தனையை பூர்த்தி செய்த நிலையில், தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
[10/17, 18:02] Sekarreporter 1: வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக்கோரி கடந்த 1979ம் ஆண்டு மின்சார வாரியத்திடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழாய் இணைப்பு வழங்கி அதன் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மின்சார வாரியம் அளித்த பதிலில், மின்சார இணைப்பு அளிக்கும் வகையில் 14 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் சாசனப்படி, மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு எனக் கூறிய மனித உரிமை ஆணையம், இதற்காக அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்க உத்தரவிட்ட ஆணையம், குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட கூடாதென வனத்துறைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது

You may also like...