Madras high court orders

[11/13, 09:00] Sekarreporter1: கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் முழுவதையும் இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்தி, பொதுப் பணித்துறை பொறியாளரிடம் சான்றிதழ் பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்தை, அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி அமல்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் அனுமதியை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
கொசஸ்தலை ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்துள்ளதாகவும் கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்வழிப்பாதையில் உள்ள கட்டட பொருள்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,
நீர்வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்ற நான்கு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பணிகளை அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கும்போது, அதற்கான தொழில்நுட்பங்களைக் நிறுவனங்கள் பெற்றுள்ளதா, இல்லையா என தெரியாதா எனக் கேள்வி எழுப்பி, உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் மின்வாரிய தலைவர் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருக்கும் அனைத்து இடிபாடுகள், கான்கிரீட் பொருட்களை விரைந்து அகற்றி, பொதுப் பணித்துறை பொறியாளரிடமிருந்து சான்றிதழை டான்ஜெட்கோ பெற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆற்றுப் படுக்கையில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டதா என்பது குறித்து சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) நீர்வளப் பொறியியல் துறையின் உதவியைப் பெற்று ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தி விசாரணை நவம்பர் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[11/13, 12:54] Sekarreporter1: கொரோனா ஊரடங்கிற்கு பின்
பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம்,மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு  பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது…

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன் லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய  மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக் குறைவு இருப்பதாகவும், வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

பின்னர், இந்த பிரச்னைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா? வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
[11/13, 13:17] Sekarreporter1: திருச்சி டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், உரிமம் அளிக்கப்பட்ட பகுதியை தாண்டி குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதன் உரிமத்தை நிறுத்தி வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்துக்கு அருகில் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அந்த குவாரிகளில் இருந்து கனிமப் பொருட்களை டிப்பர் லாரிகள் மூலம் தங்கள் கிராமத்தின் வழியாக கொண்டு செல்வதால், காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுவதாக கூறி, இடையத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 24 மணி நேரமும் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால், இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ஆய்வு செய்ய அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளின்படி குவாரி நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்யவும், உரிம விதிகளை மீறி கூடுதல் பரப்பில் குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டால் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் இரவு நேரங்களில் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[11/13, 14:17] Sekarreporter1: சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாட அனுமதிக்க கோரிய மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்ன காஞ்சியில் உள்ள அருள்மிகு வரதராஜ சுவாமி கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான மோகினி அலங்கார நிகழ்ச்சியின் போது தென்கலை ஸ்தோத்ரபாத கோஷ்டி ஸ்தோத்ரபாதம் பாடுவது பல ஆண்டுகளாக நடந்து வந்ததாகவும்,  இதற்கு ஸ்ரீ தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறி, தென் கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்னைக்கு சட்டப்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என தாத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா தரப்பில் கோரப்பட்டது.

அறநிலையத் துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, இப்பிரச்னை தொடரபாக அளித்த விண்ணப்பம் குறித்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும்படி இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
[11/13, 14:37] Sekarreporter1: கோவில் சொத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் கிளினிக் நடத்தி வந்த மருத்துவரை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்தில் கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் தியாகராஜன், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறி, அவரை அப்புறப்படுத்த கோவில் செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் தியாகராஜன் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2013ம் ஆண்டு வாடகை செலுத்தவில்லை என மனுதாரரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து, 2014 அக்டோபர் வரையிலான வாடகை பாக்கி 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், 2019ல் தன்னிச்சையாக வாடகையை உயர்த்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், 2014 நவம்பர் முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகையை வழங்காமல் இருந்ததால், மனுதாரரை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து அவரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்த நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாதவரின் குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஏழு ஆண்டுகளாக ஒரு பைசா கூட வாடகை செலுத்தாமல் கோவில் சொத்தை அனுபவித்த நிலையில், அப்புறப்படுத்த உத்தரவை எதிர்க்க எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுவரை அவரை அப்புறப்படுத்தியிருக்காவிட்டால், உடனடியாக கோவில் சொத்தில் இருந்து வெளியேற்றவும், ஏழு ஆண்டு வாடகை பாக்கியை வசூலித்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
[11/13, 15:08] Sekarreporter1: வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தும்படி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ. க்கு தடை விதிக்க கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்கு செலுத்தப்படும் தொகைக்கு பணம் கையாள்வத்ற்கான கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கருவூல இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்கு பதிலளிக்காத எஸ்.பி.ஐ. அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு அதிகாரிகளின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல இந்த வழக்கில் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்த அதிகாரிகள், மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்கு துவங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொறுப்பற்ர முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில், கவுரவமாக நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி.ஐ. பொது மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ரிசர்வ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறாததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காக செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவையும், இதுசம்பந்தமான சுற்றறிக்கையும் அனைத்து கிளைகளுக்கும் அனுப்ப எஸ்.பி.ஐ. வங்கியின் பொது மேலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[11/13, 16:57] Sekarreporter1: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.கடலோர மாவட்டங்களில் இருந்து தாது மணலை எடுப்பதற்கு தடை விதித்தும் ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி.சுரேஷ் என்பவரையும் நியமித்தது

அதன்படி வழக்கறிஞர் வி. சுரேஷூம் தனது ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதின் காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது ..
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சுரேசின் அறிக்கையை ஆய்வு செய்து பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு விவி மினரல்ஸ் நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...