Madras high court orders 8th january

[1/8, 11:11] Sekarreporter 1: நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,காஞ்சிபுரம் மாவட்டம்
பெருங்களத்தூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 7 சென்ட் நிலம் உள்ளதாகவும்,தனது இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தை சென்னை பம்மலை சேர்ந்த சுனில் போத்ரா என்பவர் கடந்த 2009 ம் ஆண்டு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுனில் போத்ரா தனது இடத்திற்கு செல்ல ஏதுவாக இருந்த பொது பாதையை
அபகரித்ததால், தாம்பரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில், பொது பாதையை பயன்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியை 2017 ல் பெற்றுள்ளதாகவும்,ஆனால்,
,கடந்தாண்டு தன்னுடைய இடம் மற்றும் பொதுப்பாதை அனைத்தும் அபகரிக்கப்பட்டு பிளாட்களாக மாற்றி விற்பனை செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மறைத்து சட்டவிரோதமாக பிளாட்க்கான ஒப்புதல் வாங்கியுள்ளதாகவும்,இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போய் உள்ளதாக தெரிவித்துள்ளார். நில அபகரிப்பு புகாரை அதிகாரிகள் அலட்சிப் படுத்துவதாக கூறியுள்ளார்.
தன்னுடைய இடத்திற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பிளாட்க்கான ஒப்புதலை ரத்து செய்யக்கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும், சம்மந்தப்பட்ட தன்னுடைய இடத்தை மூன்றாம் நபர் பெயரில் பத்திரப் பதிவு செய்யக் கூடாதென படப்பை சார் பதிவாளரிடமும் மனு அளித்தும்,
புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்..
தன்னுடைய இடத்தை அபகரிக்க அரசு அதிகாரிகள் மறைமுகமாக துணை போயியுள்ளதாகவும், தன்னுடைய மனுவை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் விசாரிக்கவும், சம்மந்தப்பட்ட இடத்தை பிளாட்கள் போடுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார். அதிகாரிகள் கடமையை செய்யத் தவறுவதன் காரணத்தினாலேயே நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனு குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை,பெருங்களத்தூர் டவுன் பஞ்சாயத்தின் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்
[1/8, 13:23] Sekarreporter 1: விருதுநகரில் 1966ம் ஆண்டு கட்டப்பட்ட நூலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, பொது நூலகத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள இலுப்பையூரில் கடந்த 1966ம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம், மோசமான நிலையில் இருப்பதாகவும், வாசகர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நூலக கட்டிடத்தை புதுப்பிக்க கோரி அந்த பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.செல்வராஜ், பொது நூலகத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜரானார்கள்

அப்போது, பொது நூலகத் துறை தரப்பில், நிதிப் பிரச்னை காரணமாக நூலகத்தை புதுப்பிக்க இயலவில்லை எனவும், எம்.பி – எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய கிளை நூலகம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்ட போதும், பழைய நூலகத்தை புதுப்பிக்க உரிய நிதியைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நூலக துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[1/8, 13:25] Sekarreporter 1: பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணியை கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி போரூர் பாலத்திலிருந்து தப்பியோட முயன்றபோது வளசரவாக்கம காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மகன் மணி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை பார்த்தசாரதி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காவல் நிலையத்தினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் சி.டி.மணியை கைது செய்ததாகவும், ஆனால் போரூர் பாலத்தில் கைது செய்ததாக கதை ஜோடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆவணங்களை தெளிவாக வழங்காமல் குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால்தான் சி.டி.மணியை கைது செய்யப்பட்டதாகவும், குற்றவழக்குகளின் தீவிரத்தை பொறுத்தே குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் நகலை முறையாக வழங்கவில்லை என்றும், சில பக்கங்களில் தெளிவு இல்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதடிப்படையில் சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்ததவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[1/8, 16:16] Sekarreporter 1: டிஸ்லெக்சியா-வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி, உளவியல் ஆலோசனை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி வருவதாக தமிழக பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த கே.இளங்கோ என்பவர், டிஸ்லெக்சியா-வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கான நிபுணர் குழு அமைப்பதற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என். செந்தில்குமார் ஆஜராகி, வாசித்தல், எழுதுதல், கற்றுக்கொள்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமத்தை குறிக்கும் டிஸ்லெக்சியா எனப்படும் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆஜராகி, பள்ளி கல்வி ஆணையரகத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லியின் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்

அதில், சம்க்ரா சிக்‌ஷா என்ற திட்டத்தின் அடிப்படையில் டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும், பள்ளிகல்வித் துறையில் 2,398 சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்கள் டிஸ்லெக்சியா உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்லெக்சியா குறைபாட்டிற்கு சமூக ஊடகங்ளில் அடிமையாவது காரணமில்லை என்றும், சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில் அந்த குறைபாடு குறித்து 1 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை 346 மாணவர்கள் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போக்குவரத்து செலவு, உதவியாளர் படி, ஊக்கத்தொகை ஆகியவற்றிற்காக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பு, அலைப்பேசி பயன்பாடு ஆகியவை குறித்தும் பயிற்சி அளிப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோர் – ஆசிரியர் சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவற்றை தற்போதைக்கு மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது. அதேசமயம் அந்த நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்யவும், கண்காணிக்கவும் வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[1/8, 16:21] Sekarreporter 1: புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி மகேஸ்வரி, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் ஆட்டோ டிரைவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கொடுங்கையூர் போலீசில் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மகேஸ்வரியின் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில், தனக்கு எதிராக அதே பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவரிடம் புகார் பெற்றும் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, கொடுங்கையூர் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் வர்கீஸ் இக்னேஷ்யஸ் ராஜா மற்றும், உதவி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக பார்த்தசாரதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், மூன்று காவல் துறை அதிகாரிகளும் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகையை மூன்று காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தது.

You may also like...